ஸ்ரீநகர் 'ஜம்மு - காஷ்மீரில் நிலைமை மேம்பட்டுள்ளது. ஆனாலும், ராணுவத்தை முழுமையாக வாபஸ் பெறும் வகையிலான சூழல் இன்னும் ஏற்படவில்லை' என, ராணுவத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு முகாமிட்டுள்ள படைப் பிரிவின் கமாண்டிங் அதிகாரி அமர்தீப் சிங் அஹூஜா கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீரில் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
ஆனாலும், ராணுவத்தினரை முழுமையாக முகாமுக்கு திரும்ப அழைக்கும் வகையிலான சூழல் இன்னும் ஏற்படவில்லை.
ஜம்மு - காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு கருவியாகவே ராணுவம் செயல்படுகிறது. இங்கிருந்து ராணுவம் வாபஸ் பெறப்படுவதற்கு முன், பல பணிகளை செய்ய வேண்டியுள்ளது. அது எப்போது நடக்கும் என இப்போது கூற முடியாது.
மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறோம். 30 ஆண்டு களுக்கு முன், நான் முதன் முதலாக இங்கு வந்தபோது நிலைமை கொந்தளிப்பாக இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, குறிப்பாக, ஆகஸ்ட் 2019க்குப் பின் நிலைமை மேம்பட்டுள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்புவதற்காக ராணுவத்தினரும், மற்ற விசாரணை அமைப்பினரும் பல தியாகங்களை செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.