புதுடில்லி,:கடந்த ஆண்டில், நாடு முழுதும் உள்ள சட்டசபைகளின் கூட்டத்தொடர்கள், சராசரியாக 21 நாட்களுக்கு மட்டுமே நடந்ததாக, தனியார் ஆய்வு அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
நம் நாட்டின் ஜனநாய கத்தை வலுப்படுத்தும் வகையில், பார்லி., மற்றும் மாநில சட்டசபை நடவடிக்கைகளை, பி.ஆர்.எஸ்., என்னும் தனியார் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நாடு முழுதும் நடந்த சட்டசபை கூட்டத் தொடர்கள் குறித்து ஆய்வு செய்த இக் குழு, இது தொடர்பான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
![]()
|
நாடு முழுதும் உள்ள 28 மாநிலங்களின் சட்டசபை கூட்டத் தொடர்கள், கடந்த ஆண்டு சராசரியாக 21 நாட்களுக்கு நடந்துள்ளன.
இதில், அதிகபட்சமாக கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடர் 45 நாட்களுக்கு நடந்துள்ளது. இது, மேற்கு வங்கத்தில் 42 நாட்களும், கேரளாவில் 41 நாட்களும் நடந்துள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடர்களின் போது 61 சதவீத அமர்வுகள் இடம்பெற்றன. தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில், 90 சதவீதத்திற்கும் அதிகமான அமர்வுகள் இடம்பெற்றன.
கடந்த 2016ல், 24 மாநிலங்களின் சட்டசபை கூட்டத்தொடர்கள் சராசரியாக 31 நாட்களுக்கு நடந்தன. 2017ல் 30 நாட்கள்; 2018ல் 27 நாட்கள்; 2019ல், 25 நாட்களுக்கு நடந்தன.
கொரோனா பரவல் காரணமாக 2020ல் அமர்வுகளின் எண்ணிக்கை 17 நாட்களாக குறைக்கப்பட்டது. 2021ல், இது 22 நாட்களாக இருந்தது.
கடந்த ஆண்டு, 20 மாநிலங்கள் சராசரியாக எட்டு நாட்களுக்கு பட்ஜெட் குறித்து விவாதித்தன. முழு பட்ஜெட் விவாதத்துக்கு தமிழகம் 26 நாட்களை செலவழித்துள்ளது.
கர்நாடகா 15 நாட்களும், கேரளா 14 நாட்களும், ஒடிசா 14 நாட்களும் விவாதித்தன. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து, தன் பட்ஜெட்டை ஒரே நாளில் விவாதித்து நிறைவேற்றியது.
கடந்த 2022ல், மாநில சட்டசபைகள், பல்வேறு பிரிவுகளில் 500க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றின. அனைத்து மாநிலங்களும் சராசரியாக 21 மசோதாக்களை நிறைவேற்றின.
அசாம் மாநிலம் அதிகபட்சமாக 85 மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தில் 51 மசோதாக்களும், கோவாவில் 38 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.