அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு:
தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த, ஜெயலலிதா ஆட்சியில், பொதுமக்கள் ஆட்சேபித்த, 500, 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன. பழனிசாமி ஆட்சியில், 500 கடைகள் மூடப்பட்டன. தி.மு.க., ஆட்சியில் விற்பனை குறைவாக உள்ள கடைகளை மட்டும் மூட கணக்கெடுப்பு நடக்கிறது. மது விற்பனை, 36 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 44 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்ததில் இருந்தே, மக்கள் நலனில், தி.மு.க., கொண்டுள்ள அக்கறை அப்பட்டமாக தெரிகிறது.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
தர்மபுரியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட, 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில் காணாமல் போனதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை கண்டறிய, உரிய விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
![]()
|
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் அறிக்கை:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக ஆதீனங்களையும், பார்லிமென்டில் சைவ நெறி செங்கோல் நிறுவியதையும் விமர்சனம் செய்து பேசிய, சி.பி.ஐ., - எம்.எல்., கட்சியைச் சேர்ந்த அந்தோணிமுத்து உள்ளிட்ட குழுவினர் மீது வழக்கு பதிவு செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
புதுக்கோட்டையில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில், கொலையாளிகளை கைது செய்த காவல் துறையினரை, தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். காவல் துறையினருக்கு உத்வேகம் அளிக்கும், இந்தச் செயலை நானும் பாராட்டுகிறேன். அதே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், பட்டியலின சமுதாயத்தினரின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுங்குற்றம் நிகழ்ந்து ஐந்து மாதங்களாகி விட்டது. காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க டி.ஜி.பி., நடவடிக்கை எடுப்பாரா?