சென்னை: ''அபாயகரமான முறையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை இறக்கினால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்,'' என, தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.
துாய்மை பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று, சென்னையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில், தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:
அபாயகரமான முறையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால், மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 பிரிவு, 7ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரிவு, 9ல், 2 ஆண்டு சிறை, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை மீறுவோருக்கு, 5 ஆண்டு சிறை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
யாராவது மனிதர்களை பயன்படுத்தினால், 'சபாய் மித்ரா சுரக் ஷா சேலஞ்ச்' திட்டத்தில் துவங்கிய, கட்டணமில்லா 14420 என்ற தேசிய உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.