வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மகளிருக்கு, 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை, கூட்டுறவு வங்கி சார்பில் ரேஷன் கடைகளில் பட்டுவாடா செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்., முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தகுதியான பயனாளிகள் தேர்வு முழுவீச்சில் நடக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். அந்த கடனை தவணை வாரியாக செலுத்துகின்றனர்.
உரிமை தொகையை, அந்த வங்கி கணக்கில் செலுத்தினால், கடனுக்கான தவணையாக பிடித்தம் செய்து விடுவர். பல வங்கிகள், 'மினிமம் பேலன்ஸ்' என்ற குறைந்தபட்ச இருப்பை கட்டாயமாக்கி உள்ளன. மேலும், இந்த தொகையை, வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தினால், திட்டம் பிரபலம் அடையாது; பெண்களின் கைகளில் கொடுத்தால் தான், தி.மு.க.,வுக்கு ஆதரவாக மாறுவர் என்றும், அக்கட்சியினர் கருதுகின்றனர்.
![]()
|
எனவே, மகளிர் உரிமை தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏ.டி.எம்., கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கூட்டுறவு வங்கி கணக்கில் மட்டும், உரிமை தொகை செலுத்தப்படும். அதன் ஊழியர்கள், 'மைக்ரோ' ஏ.டி.எம்., எனப்படும் கையடக்க கருவி மற்றும் பண பெட்டகத்துடன். ரேஷன் கடைக்கு மாதம்தோறும் செல்வார்.
அந்த கருவியில் பயனாளிகளின், 'ஆதார்' எண் உள்ளிட்ட விபரங்கள், ஏற்கனவே பதிவாகி இருக்கும். அவர்கள் விரல் ரேகை பதிவு செய்து அல்லது, 'டெபிட் கார்டு' பயன்படுத்தி பணத்தை பெறலாம். இதை செயல்படுத்துவது தொடர்பாக, கூட்டுறவு துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.