வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க என முதல்வர் ஸ்டாலினிடம் பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
வைரமுத்து மீது பல ஆண்டுகளாக பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறி வருகிறார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் டில்லியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடக்கும் போராட்டம் குறித்து கமல், மல்யுத்த வீரர்கள் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக அவர்களை போராட வைக்க வேண்டிய நாம், தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அவர்களை போராட வைத்துவிட்டோம். நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது விளையாட்டு வீராங்கனைகள் மீதா அல்லது அதிக குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதி மீதா? என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலடியாக சின்மயி, தமிழகத்தைச் சேர்ந்த பாடகி ஒருவர், தன்னிடம் அத்துமீறிய பாலியல் குற்றவாளியை வெளிச்சம்போட்டு காட்டியதற்காக 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். அந்த கவிஞர் உங்களுக்கு நெருக்கமானவர் என்பதால் அதைப்பற்றி பேசவில்லை. கண்முன்னே நடக்கும் துன்புறுத்தலை புறக்கணித்துவிட்டு பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் அரசியல்வாதியை எப்படி நம்ப முடியும்” என குறிப்பிட்டார்.
![]()
|
முதல்வருக்கு கேள்வி
சின்மயி வெளியிட்ட மற்றொரு பதிவு: முதல்வர் ஸ்டாலின் அவர்களே... இந்தியாவில் எங்கு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள்.
சினிமா துறையில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. உங்கள் நண்பரும், ஆதரவாளருமான வைரமுத்து மீது 17-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அவர் உங்களிடம்பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார். இதனால் அவரைப்பற்றி பெண்கள் மேலும் பேச முடியாத நிலை உள்ளது.
தமிழகத்தில் உங்கள் கட்சி அவரைத்தான் முன்னிலைப்படுத்துகிறது. அவர் என்னையும் மற்ற பெண்களையும் அடக்க நினைக்கிறார். உங்கள் கண் எதிரே இது நடக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுங்கள். நான் பேசுகிறேன். ஆனால் மற்ற பெண்கள் பேச பயப்படுகிறார்கள். இவ்வாறு சின்மயி பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவால் வைரமுத்து மீதான பாலியல் புகார் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.