''கட்டட நிறைவு சான்று வாங்க முடியாம, கலெக்டர் புலம்புதாரு வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''கலெக்டருக்கே இந்த நிலைமையாங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''அதுவும் சாதாரண ஆளு இல்ல வே... தமிழக அமைச்சரின் சகோதரி மகனாம்... அவரு முதல்ல, கொங்கு மண்டலத்தில் மிக முக்கிய நகரின் மாநகராட்சி கமிஷனரா இருந்தாரு...
''அதன் பிறகு, சிறைக்கு பெயர் போன வடமாவட்டத்தின் கலெக்டரா இப்ப இருக்கிறாரு... இவர் கமிஷனரா இருந்த ஊருல, புதுசா சொந்த வீடு கட்டினாரு... அந்த வீட்டுக்கு மின் இணைப்பு வாங்க, மாநகராட்சியில கட்டட நிறைவு சான்று கேட்டு விண்ணப்பிச்சாரு வே...
''ஆனா, 'ஏகப்பட்ட விதிமீறலோடு வீட்டை கட்டிட்டதால, சான்று கொடுக்க முடியாது'ன்னு மாநகராட்சி அதிகாரிங்க கறாரா சொல்லிட்டாங்க... பல விதமா அழுத்தம் கொடுத்தும் மசிய மாட்றாங்க வே...
''அதோட, 'உங்களுக்கு மட்டும் சான்று கொடுத்ததா தெரிஞ்சதுன்னா, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் வரிசையா வந்திடுவாக, ஆளை விடுங்க சாமி'ன்னு மாநகராட்சி அதிகாரிங்க நழுவிட்டாவ வே...'' என்ற அண்ணாச்சி, ''அட, வாங்க குமாரவேல் பாண்டியன், ஊர்ல மாமா சக்கரபாணி சவுக்கியமா...'' என, நண்பரிடம் நலம் விசாரித்தார்.