வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலராக வைகோ, முதன்மை செயலராக துரை, துணைப் பொதுச் செயலர்களாக மல்லை சத்யா, டாக்டர் ரொக்கையா உள்ளிட்டோர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை எழும்பூரில்உள்ள ம.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள் தேர்தல், நேற்று நடந்தது. பொதுச்செயலர் பதவிக்கு வைகோ மனு செய்தார். எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால், அவர் தேர்வு செய்யப்பட்டார். தலைமை நிலைய செயலராக இருந்த அவரது மகன் துரைக்கு, முதன்மை செயலர் என்ற புதிய பதவி தரப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் பதவிக்கு ஆடிட்டர் அர்ச்சுனராஜ், பொருளாளர் பதவிக்கு செந்தில் அதிபன், துணைப் பொதுச் செயலர்களாக மல்லை சத்யா, ஆடுதுறை மணி, ராஜேந்திரன், டாக்டர் ரொக்கையா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
மகளிர் அணி துணை செயலர் பதவி வகித்த ராணி செல்வின், துணை பொதுச் செயலர் பதவி எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது.
தி.மு.க., - எம்.பி.,யாக கணேசமூர்த்தி இருப்பதால், அவரது பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தன் ஆதரவாளரும், ஈரோடு மாவட்ட செயலருமான குழந்தைவேலுவை பொருளாளராக்க வேண்டும் என, வைகோவிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, துரை ஆதரவாளர் செந்தில் அதிபனுக்கு, அப்பதவி பதவி வழங்கப்பட்டுள்ளது.
![]()
|
இந்நிலையில், வரும் 14ம் தேதி, ம.தி.மு.க., பொதுக்குழு கூடுகிறது. அதில், புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஒப்புதல் அளித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
''ம.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என்கிறார் வைகோ.
நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் பேசியதாவது: எத்தனையோ சோதனைகளை தாண்டி, கட்சி வீறுநடை போடுகிறது. எத்தனையோ பூகம்பம், புயல்களை தாங்கி, இந்த கட்சியை மன உறுதியுடன் நடத்தி வருகிறோம்.ம.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
கட்சி நிர்வாகிகள் மத்தியில் நடந்த ஓட்டெடுப்பு வாயிலாக தான் துரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால், இளைஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து வருகின்றனர். புதிய விடியலை நோக்கி, ம.தி.மு.க., பயணிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.