ஊட்டி : ஊட்டியில் பணி ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,க்கு 'சல்யூட்' அடித்த எஸ்.பி., தனது வாகனத்தில் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.ஐ., ரேங்கில் ரவி என்பவர் அலுவலக பதிவேடுகளை பராமரிக்கும் பணி செய்து வந்தார். 1988ல் பணியில் சேர்ந்து, 35 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி கடந்த மாதம், 31ல் ஓய்வு பெற்றார்.
இவருக்கு அலுவலகத்தில் நடந்த பிரவுபசார நிகழ்ச்சியில், எஸ்.பி., பிரபாகர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். 'ஸ்பெஷல் பிராஞ்ச்' இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் அலுவலக பணியாளர்கள் அவரின் பணியை பாராட்டி பேசினர்.
இதை தொடர்ந்து, தனது வாகனத்தில் ரவியை ஏற்றி 'சல்யூட்' அடித்த எஸ்.பி., ஊட்டி ஜெயில்ஹில் பகுதியில் உள்ள ரவியின் வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார். ரவியின் சிறப்பான பணிக்கு, 2021-22 ஆண்டுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.