சென்னை: இந்த ஆண்டு கோடையில், மே மாதம், 60 சதவீத இடங்களில், வெப்ப அளவு இயல்பில் இருந்து, சற்று கூடுதலாக பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, வால்பாறையில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
வரும் நாட்களை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் அதிகபட்சம், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
கேரள, கர்நாடக கடலோரம், லட்சத்தீவு, தெற்கு தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரம், அரபி கடல் பகுதிகள் போன்றவற்றில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, வரும், 5ம் தேதி வரை, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, திருத்தணி மற்றும் சென்னை மீனம்பாக்கத்தில், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
நுங்கம்பாக்கம், வேலுார், 40; கடலுார், கரூர் பரமத்தி, மதுரை, நாகை, திருச்சி, புதுச்சேரி, 39; நாமக்கல், ஈரோடு, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்துார், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
![]()
|
மே மாத வெப்ப நிலவரம் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: இந்த ஆண்டை பொறுத்தவரை, மாநில அளவில், வழக்கமான அளவிலேயே கோடை கால வெப்பம் பதிவாகியுள்ளது.
மே மாதத்தில், 60 சதவீத இடங்களில், இயல்பு அளவில், 1 டிகிரி செல்ஷியஸ் முதல், 2.5 டிகிரி செல்ஷியஸ் வரையில், சற்று அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில், சராசரி வெப்ப அளவு, 33 முதல் 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வேலுார்மாவட்டத்தில், வெப்ப அலைபோன்ற தாக்கத்தால், 11 நாட்கள் வெயில் சற்று அதிகமாக நிலவியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.