வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சியோல்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், சிகரெட் மற்றும் மதுவுக்கு அடிமையாகி விட்டதாகவும், தூக்கமின்மை நோயால் பாதிக்கப்படுவதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், 39, உலக நாடுகளுக்கு கட்டுப்படாமல் தன் விருப்பம் போல் செயல்பட்டு வருகிறார். நாட்டின் தலைமை பொறுப்பை, 2011ல் ஏற்றுக் கொண்ட அவர், தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.
வடகொரியா குறித்த எந்த ஒரு தகவலும் வெளியுலகுக்கு அதிகம் தெரியாது. குறிப்பாக, கிம் ஜாங் உன் குடும்பம் குறித்த தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், தென் கொரியாவின், தேசிய புலனாய்வு சேவை என்ற அமைப்பு, கிம் ஜாங் உன் குறித்த தகவல்களை சேகரித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கிம் ஜாங் உன், சிகரெட் மற்றும் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். சமீபத்தில், மிகவும் உயர் ரக சிகரெட்டுகளை, வெளிநாடுகளில் இருந்து வடகொரியா இறக்குமதி செய்துள்ளது. அதுபோல மிகவும் பெரும் பணக்காரர்கள் மதுவுடன் சாப்பிடும் நொறுக்கு தீனிகளும் வாங்கப்பட்டுள்ளன. இவை அதிபருக்காக வாங்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் அவர், 'இன்சோம்னியா' எனப்படும் தூக்கமின்மை நோயால் அவதிப்படுவதாக தெரிகிறது. அவருடைய சமீபத்திய படங்களை பார்க்கும்போது, கண்களின் கீழ் கருவளையங்கள் உள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி, அவருடைய படங்களை ஆய்வு செய்தபோது, அவர் எடை கூடியுள்ளதும் தெரிகிறது. தற்போதைய நிலையில், அவர், 140 கிலோ எடையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.