வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது 2 எப்ஐஆர்.,கள் போடப்பட்டு உள்ளதாக டில்லி போலீஸ் கூறியுள்ளது. மல்யுத்த வீராங்கனைகளை தொடுதல், மற்றும் முறையற்ற வகையில் வீராங்கனைகளிடம் கேள்வி கேட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து, தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனையர் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வாரக்கணக்கில் நீடித்து வருகிறது. பார்லிமென்ட் முற்றுகை, சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை கங்கை நதியில் வீசுதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட முயற்சி செய்தனர். இதனை தொடர்ந்து, மல்யுத்த வீரர்களின் போராட்டம் சர்வதேச கவனம் பெற்றது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் உலக மல்யுத்த அமைப்பும் வீராங்கனைகள் பக்கம் நின்றது.
இந்நிலையில், பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது 10 புகார்கள் கொடுக்கப்பட்டதாகவும், 2 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. பிரிஜ்சிங் பூஷன் சரண் சிங், பெண் வீராங்கனைகளின் மூச்சை சோதனை செய்வதாக கூறி அவர்களை முறையற்ற வகையில் தொடுதல், முறையற்ற கேள்விகளை கேட்டல், போட்டிகளின் போது காயமடைந்த வீராங்கனைகளின் மருத்துவ செலவை மல்யுத்த கூட்டமைப்பு ஏற்க, பாலியல் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்துதல், தெரியாத அல்லது அங்கீகாரம் பெறாத பயிற்சியாளர்களை அனுப்புதல், அவரை பின் தொடர்தல் என 10 புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஏப்.,28 ல் அவர் மீது 2 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு மைனரும் அடங்குவார். அவர் சார்பாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார். பிரிஜ்சிங் பூஷன் மீது சட்டப்பிரிவு 354, 354(ஏ), 354(டி) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.