வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பகல் கொள்ளையையும், தவறுகளையும் மறைக்க முதலீட்டை ஈர்க்க வெளிநாட்டு பயணம் என்று தமிழக மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை முதல்வர் ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பத்திரிகைகளில் 9 நாள் சிங்கப்பூர் - ஜப்பான் பயணத்தில் முதலில் ரூ.1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று செய்தி வந்தது. பிறகு ரூ.3,233 கோடி என்று வந்தது. இதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் ரூ.1,891 கோடி ரூபாய்க்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் கூறியுள்ளார். அப்போது, உண்மையில் வெளிநாடுகளுக்கு சென்று திரட்டிய முதலீடு ரூ.1,342 கோடி தான். இதில் எது உண்மை? எதை நம்புவது?
ஸ்டாலின் புரிந்துணர்வு மேற்கொண்ட கொமாட்சு நிறுவனம் 2005 லேயே ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஓம்ரான் நிறுவனம் ஏற்கனவே உ.பி.,யில் இயங்கி வருகிறது. அவர்களின் அதிகாரிகளை அழைத்து, அவர்களிடமே முதலீடுகளை சுலபமாக பெற்றிருக்காமல், அதை செய்யாமல், ஸ்டாலின் சிங்கப்பூர்- ஜப்பான் வரை சென்றதை தான் தோல்வி என்கிறோம்.
அதிமுக ஆட்சியில் 2019 ல் எனது வெளிநாட்டு பயணத்தின் மூலம் 41 நிறுவனங்களின் ரூ.8,835 கோடி மதிப்பு முதலீடுகளை ஈர்த்து, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது. பேரிடர் காலத்தில், 2020ல் ஒரே நேரத்தில் டாடா, ஓலா போன்ற நிறுவனங்களிடம் இருந்து மட்டும் சுமார் 15 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
திமுக ஆட்சியில், பல நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றுவிட்டது. தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை இழந்ததால், 2030ல் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்துவோம் எனக் கூறுவது வெறும் வாய்ச்சவடால்தானே.
தமிழகத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்த நிறுவனங்களை, வேறு மாநிலங்களுக்கு அனுப்பி தாரை வார்த்துவிட்டு துபாய், சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று 6 ஆயிரம் கோடி மற்றும் 3 ஆயிரம் கோடி என்று சுமார் 9 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்ததற்கு தனது முதுகை தானே தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் முதல்வரின் வாய்ச் சவடால் திறமையை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
தமிழகத்தை தலை நிமிரச் செய்வோம் என்று கூறி ஆட்சியை பிடித்த திமுக அரசு, தாங்கள் அடிக்கும் பகல் கொள்ளையையும், தவறுகளையும் மறைக்க இதுபோல் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் என்று தமிழக மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை இத்துடன் நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.