வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முஸ்லிம் லீக்கை மதசார்பற்ற கட்சி என பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் பேச்சுக்கு, 'மத அடிப்படையில் இந்தியாவை பிரித்ததற்கு காரணமான கட்சி மதசார்பற்ற கட்சியா?' என பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அமெரிக்கா சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் உரையாற்றி வருகிறார். ராகுலின் உரையின்போது, நாட்டை அவமதித்து வருவதாக பா.ஜ.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (ஜூன் 1) வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது கேரளாவில் முஸ்லிம் லீக்குடன் காங்கிரஸின் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், "முஸ்லிம் லீக் முற்றிலும் மதசார்பற்ற கட்சி, அக்கட்சியில் மதசார்பானது எதுவுமில்லை. அந்த செய்தியாளர் முஸ்லிம் லீக்கைப் படிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
பா.ஜ.,வை வீழ்த்துவோம்

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எதிர்க்கட்சிகள் நன்றாக ஒன்றுபட்டுள்ளன. அது மேலும் ஒன்றிணைந்து வருகிறது. நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் உரையாடி வருகிறோம். இதற்காக நிறைய நல்ல பணிகள் நடக்கின்றன. இது ஒரு சிக்கலான விவாதம். ஏனென்றால் நாங்கள் வலுவாக இருக்கும் இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளும் பல இடங்களில் வலுவாக உள்ளன. எனவே கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் தேவை. ஆனால் மத்திய பா.ஜ.,வுக்கு எதிராக ஒரு மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணி உருவாகும் என்று நான் நம்புகிறேன். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.,வை வீழ்த்துவோம்" என்று கூறினார்.
ராகுலின் முஸ்லிம் லீக் குறித்த கருத்துக்கு பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், ''ஜின்னாவின் முஸ்லிம் லீக் ஒரு மதசார்பற்ற கட்சியா? மத அடிப்படையில் இந்தியாவை பிரித்ததற்கு காரணமான கட்சி மதசார்பற்ற கட்சியா? இந்தியாவில் சிலர் இன்னும் முஸ்லிம் லீக்கை ஆதரிப்பவரை மதசார்பற்றவராகக் கருதுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது'' எனத் தெரிவித்துள்ளார்.