வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அரசியல் என்பது சித்தாந்தம், மதிப்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, குடும்பம், சாதி, மதம் அடிப்படையில் இருக்க கூடாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
டில்லியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்காக அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உலகப் பொருளாதார தரவரிசையில் இந்தியா மீண்டும் தனது இடத்தைப் பெற்றுள்ளது. ஒரே மாதிரியான உணர்வுடன் மக்கள் அனைவரும் எந்த பாகுபாடுமின்றி ஒன்றாக செயல்பட்டு இந்தியாவை கட்டமைப்போம். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு வலிமையான இந்தியாவைக் கனவு காண்போம்.
உலகில் எங்கும் எந்த அநீதிக்கும் எதிராக நிற்கத் தயாராக இருக்கிறோம். பலமான ராணுவம் என்பது எல்லைகளை பாதுகாப்பது மட்டுமல்ல ஒரு நாட்டின் கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தையும் பாதுகாப்பது. வலுவான, தன்னிறைவான மற்றும் வளமான தேசத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். வல்லரசான நாடாக இந்தியாவை நிலைநிறுத்துவதற்கான நேரம் இது.
இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் எந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலும் செயல்படுவதில்லை. அவற்றின் அரசியல் எல்லாம் ஒரு நபர் அல்லது ஒரு குடும்பம் அல்லது ஒரு சாதியை சுற்றியே இருக்கின்றன.
வளர்ந்த இந்தியாவில் இத்தகைய அரசியலுக்கு இடமில்லை என்றே நினைக்கிறேன். அரசியல் என்பது சித்தாந்தம், மதிப்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, குடும்பம், சாதி, மதம் அடிப்படையில் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.