வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முஸ்லிம் லீக் கட்சியை மதச்சார்பற்ற கட்சி எனப் பேசிய ராகுலின் பேச்சுக்கு பா.ஜ.,வினர் கண்டனம் தெரிவித்த நிலையில், 'இது அந்த முஸ்லிம் லீக் அல்ல, நாக்பூர் நகராட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி அமைத்த முஸ்லிம் லீக்' என காங்கிரஸ் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசுகையில், 'இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக் முற்றிலும் மதசார்பற்ற கட்சி, அக்கட்சியில் மதச்சார்பானது எதுவுமில்லை' எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
'மத அடிப்படையில் இந்தியாவை பிரித்ததற்கு காரணமான ஜின்னாவின் முஸ்லிம் லீக் ஒரு மதச்சார்பற்ற கட்சியா?' எனவும் பா.ஜ., அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறையின் தலைவர் பவன் கேரா கூறுகையில், 'பா.ஜ.,வுக்கு, மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பாகிஸ்தானின் அரசியலை பற்றி தெரிந்த அளவிற்கு இந்திய அரசியல் பற்றி தெரியவில்லை என நினைக்கிறேன்.
ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஜின்னாவின் முஸ்லிம் லீக் உடன் கூட்டணி அமைத்தார். இது அந்த முஸ்லிம் லீக் அல்ல; நாக்பூர் நகராட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி வைத்திருந்த முஸ்லிம் லீக்' எனக் கூறியுள்ளார்.