வேலுார் : ''மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு, தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேகதாது அணை கட்ட, விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் வேலுாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: எவ்வித பேச்சுவார்த்தை, சமரசம் செய்தாலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும். காவிரி பிரச்னை குறித்து, கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.