ஓசூர் : ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஆற்றில் திறந்து விடப்பட்ட நீரில் ரசாயன நுரை பெருக்கெடுத்து துர்நாற்றம் வீசியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று, 519 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், இன்று காலை நீர்வரத்து, 750 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 640 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.கெலவரப்பள்ளி அணைக்கு கூடுதல் நீர் வரும் போது, கர்நாடகா மாநில தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளின் கழிவு நீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுவது வாடிக்கையாக உள்ளது.
அதேபோல், கெலவரப்பள்ளி அணைக்கு வந்த நீரில் அதிகளவு ரசாயனம் கலந்திருந்ததால், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரில் ரசாயன நுரை ஏற்பட்டு, ஆற்றில் தண்ணீர் ஓட்டம் தெரியாத அளவிற்கு படர்ந்து துர்நாற்றம் வீசியது. மேலும், காற்றில் பறந்த ரசாயன நுரை, அருகில் உள்ள விவசாய நிலங்களில் விழுந்தது. அணை நீரை பயன்படுத்த தொடர்ந்து விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
அதேபோல், சூளகிரி அடுத்த சின்னாறு அணை பகுதியில் கடந்த, 31ல், 28 மி.மீ., மற்றும் நேற்று முன்தினம், 32 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணையின் மொத்த உயரமான, 32.80 அடியை அணை எட்டி, கடந்த மூன்று நாட்களாக உபரி நீர் வெளியேறி வருகிறது. அணைக்கு நேற்று, 55 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், 55 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. சின்னாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, நீர்வளத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.