கரூர் : கரூர் மாநகராட்சி கூட்டம், மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. மாநகராட்சி மேயர், தலைமறைவு என தகவல் வெளியான நிலையில், திடீரென மேயர் கவிதா அலுவலகம் வந்தார்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த, 26 ல் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது, மேயர் கவிதா தலைமையில் சென்ற, தி.மு.க., வினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இதனால், அன்றைய தினம் நடக்க விருந்த, கரூர் மாநகராட்சி கூட்டம் கடந்த, 29 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் காலை, 10:00 மணிக்கு மாநகராட்சி கூட்டம் நடக்கும் என, கரூர் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று நடக்கவிருந்த மாநகராட்சி கூட்டம், தேதி குறிப்பிடாமல் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான புகாரில் மேயர் கவிதா, கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியது.
இந்நிலையில், பகல், 12:15 மணிக்கு கரூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு காரில் வந்த மேயர் கவிதா, அவரது அறையில் அதிகாரிகள் சிலரை அழைத்து ஆலோசனை செய்தார். அதையறிந்த, நிருபர்கள் மேயர் கவிதாவை மாநகராட்சி அலுவலகத்தில் சந்திக்க குவிந்தனர்.
பிறகு பகல், 12:45 மணிக்கு அறையில் இருந்து வெளியே வந்த மேயர் கவிதா, நிருபர்களை பார்த்ததும், வேகமாக வெளியேறி காரில் ஏறி சென்று விட்டார். நிருபர்களின் எந்த கேள்விக்கும், மேயர் கவிதா பதில் கூறவில்லை.