பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்தது. தேர்தலில் வெற்றி ஆட்சி அமைத்த நிலையில் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறியதாவது:
‛க்ருஹ ஜோதி' என்ற திட்டம் மூலம் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஜூலை 1ல் துவங்கும். ஆனால், ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகைகளை வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும்.
‛ க்ருஹ லக்ஷ்மி என்ற திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் ஆகஸ்ட் 15- முதல் அமல்படுத்தப்படும்.
‛ அன்ன பாக்யா' திட்டம் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு ஜூலை 1-முதல் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் வழங்கும் திட்டம் ஜூன் 11 முதல் நடைமுறைக்கு வரும். ஆனால், கர்நாடகா மாநிலத்திற்குள் மட்டுமே இச்சலுகையை பெறலாம். ஏசி மற்றும் சொகுசுப் பேருந்துகளிலும் இந்தச் சலுகை இல்லை. ஆண்களுக்கு 50 சதவீத இருக்கை ஒதுக்கப்படும். மற்ற இருக்கைகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
யுவாநிதி திட்டத்தின் கீழ், 2022 - 2023 கல்வியாண்டில் பட்டப்படிப்பை முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.