பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 288 பேர் பலியாகினர் . 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.


கோர விபத்து
கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து, மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி ரயில் எண் 12864 என்ற பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்புறத்தில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து ரயில் எண் 12841 என்ற ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில், தடம்புரண்டு கிடந்த பெங்களூரு - ஹவுரா ரயில் மீது பயங்கரமாக மோதியதில் இதன் பெட்டிகளும் கவிழ்ந்தன.
மோதிய வேகத்தில், கோரமண்டல் எக்ஸ்பிரசின் பெட்டிகள், அடுத்த தடத்தில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. மூன்று ரயில்களும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி கவிழ்ந்தன.சில நிமிடங்களில் அந்த பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. எந்த பக்கம் திரும்பினாலும், அழு குரல்களும், உதவி கோரும் பயணியரின் கதறலும் காண்போர் மனதை நொறுக்கியது.
ரத்த வெள்ளம்


விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தண்டவாள பக்கவாட்டில் சிதறிக் கிடந்தன. படுகாயம் அடைந்தவர்கள் நகர முடியாமல் ரத்த வெள்ளத்தில் முனகியபடி கிடந்தனர். நொறுங்கிக் கிடந்த ரயில் பெட்டிகளில் சிக்கி பலர் வெளியேற முடியாமல் கதறினர். காயங்களுடன் ரயிலில் இருந்து வெளியேறியவர்கள் ரத்த வெள்ளத்தில், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வெறித்த பார்வையுடன் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288பேர் உயிரிழந்ததாகவும், 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. படுகாயம் அடைந்தவர்கள் கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
இரண்டு பயணியர் ரயில்களிலும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இரவு நேரம் என்பதால், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பலியானர்களின் உடல்கள் மீ்ட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு பணி
விபத்து நடந்த இடத்துக்கு, ஒடிசாவின் சிறப்பு நிவாரண துறை செயலர் சத்யபிரதா சாஹு மற்றும் வருவாய் துறை அமைச்சர் பிரமிளா மாலிக் ஆகியோரை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அனுப்பிவைத்தார்.தென்கிழக்கு ரயில்வேயின் விபத்து மீட்பு ரயில்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை மருத்துமனையில் சேர்க்கும் பணியில் 60 ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன. அவசரகால பணிகளில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்துள்ள இடத்திற்கு விரைந்துள்ளார். விபத்திற்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
ஒடிசா தலைமை செயலர் பிரதீப் ஜெனா கூறுகையில், ''காயம் அடைந்த 132 பேர் அருகில் உள்ள சோரோ, கோபால்புர், கான்டாபாடா சுகாதார மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 47 பேர் பாலசோர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தலைமை செயலர் எச்.கே.திவேதி ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு மாநில அமைச்சர் மானஸ் புனியா மற்றும் எம்.பி., தோலா சென் தலைமையில் குழு ஒன்றை அனுப்பி உள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இழப்பீடு அறிவிப்பு
விபத்து குறித்து, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:விபத்து நடந்த இடத்தில், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட கூடுதல் மீட்பு குழுக்கள் கோல்கட்டாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. விமானப் படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மீட்பு பணிகளை முடுக்கி விடுவதற்காக நான் ஒடிசா புறப்பட்டு செல்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா, 10 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாயும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்பதிவு செய்த 869 பேர்
விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரசில், மொத்தம் 23 பெட்டிகள் இருந்தன. அவற்றில், ஐந்து பெட்டிகள் துாங்கும் வசதியுடைய முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகள். 12 பெட்டிகள், 'ஏசி' வசதியுடையவை. இதுதவிர, முன் பதிவு செய்யப்படாத ஆறு பெட்டிகளும் இருந்தன. இந்த ரயிலில் பயணிக்க 869 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இந்த ரயில், இன்று மாலை 4:50 மணிக்கு சென்னை வந்தடைய இருந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து கொள்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலை ஒட்டிய நம் நாட்டின் கிழக்கு கடற்கரை, கோரமண்டல் கடற்கரை என அழைக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயில், கோரமண்டல் கடற்கரையின் முழு நீளத்தையும் கடந்து செல்வதால், இது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படுகிறது.
இன்ஜின், 11 பெட்டிகள் தடம் புரண்டன:
கோரமண்டல் ரயிலின் இன்ஜின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டதாக, ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோரமண்டல் ரயிலின் இன்ஜின் மற்றும் ஏ1, ஏ2, ஹெச்1, பி2,பி3,பி4,பி5,பி6,பி7,பி8,பி9 ஆகிய பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
ஒடிசாவில் ஒருநாள் துக்கதினம்
ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசாவில் ஒரு நாள் துக்கதினம் அனுசரிக்கப்படும் எனவும், மாநிலத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் எனவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவு:
ஒடிசா ரயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான மூலக்காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வந்தே பாரத் தொடக்க விழா ரத்து:
மும்பை - கோவா இடையே வந்தே பாரத் ரயில் சேவையை, காணொலி மூலமாக பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பதாக இருந்தது. ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து, அவ்விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ்ச்சிகள் ரத்து: ஸ்டாலின் அறிவிப்பு
ஒடிசா கோர ரயில் விபத்தினையடுத்து தமிழகத்தில் இன்று நடக்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று ஜூன் 3 ம் தேதி கருணாநதி பிறந்த நாளையொட்டி பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் கருணாநிதி நினைவிடம், ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணவித்து மாியாதை செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
ரயில் விபத்து உதவி எண்கள் அறிவிப்பு
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பலியானோர், காயமடைந்தோர் பற்றிய விபரங்களை அறிய, இந்திய ரயில்வே துறை உதவி எண்களை அறிவித்து உள்ளது.
ஹவுரா
033-2 6382217
கோரக்பூர்
89720 73925,
93323 92339
பாலசோர்
82495 91559,
79784 18322
ஷாலிமார்
99033 70746
விஜயவாடா
0866 2576924,
ராஜமுந்திரி
0883 2420541
சென்னை
044- 25330952, 25330953, 25354771
பெங்களூரு ரயிலுக்கான உதவி எண்கள்
பெங்களூரு சர் எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தில் இருந்து, ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில், நேற்று முன்தினம் காலை 10:35 மணிக்கு புறப்பட்டது.
இது, நேற்று இரவு 7:55 மணிக்கு மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு சென்றிருக்க வேண்டும்.ஆனால், அதற்கு முன், ஒடிசாவில் இந்த ரயில் உட்பட மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின. ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயிலில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் 994 பயணியரும்; முன்பதிவு செய்யப்படாத இரண்டு பெட்டிகளில் 300 பேரும் பயணித்திருக்க கூடும் என தெரிய வந்து உள்ளது.
இதனால், அவர்களின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள, தென்மேற்கு ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு
உள்ளன.
அதன் விபரம்:
பெங்களூரு
080 - 2235 6409
பங்கார்பேட்
08153 255253
குப்பம்
8431403419
சர் எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம்
96060 05129
கிருஷ்ணராஜபுரம்
88612 03980