வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,- கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வருமான வரி நிரந்தர கணக்கு எண்களை முறைகேடாக பயன்படுத்தி, 2,660 போலி நிறுவனங்கள் துவங்கி, ஜி.எஸ்.டி., வரிப் பலனில் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்த எட்டு பேர் அடங்கிய கும்பலை, நொய்டா போலீசார் கைது செய்தனர்.
![]()
|
உத்தர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்தவரும், ஊடக நிறுவனத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருபவருமான நபர், கடந்த மாதம் 10ம் தேதி போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
இதில், பஞ்சாபின் லுாதியானா மற்றும் மஹாராஷ்டிராவின் சோலாபூரில் தன், 'பான் கார்டு' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை பயன்படுத்தி இரண்டு போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், நொய்டாவை சேர்ந்த எட்டு பேர் அடங்கிய கும்பலை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்கள் நடத்தி வந்த அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட எட்டு பேர் உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் புதுடில்லியை சேர்ந்தவர்கள்.
இவர்கள், தனிப்பட்ட நபர்களின் தகவல்களை விற்பனை செய்யும் முகவர்கள் வாயிலாக, தனிநபர்களின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, வங்கி கணக்கு எண், வருமான வரி நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை பெற்று, அந்த பெயரில் வாடகை ஒப்பந்தம் போடுகின்றனர்.
அதன் பின், வருமானத்துக்கு வழியில்லாத குடிசை பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களை பிடித்து, அவர்களின் ஆதார் அட்டையை 1,000 முதல் 1,500 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். அந்த அட்டைகளில் தங்களுடைய தொலைபேசி எண்களை மாற்றுகின்றனர்.
இந்த ஆவணங்களை பயன்படுத்தி நாடு முழுதும் பல்வேறு பகுதிகளில் போலி நிறுவனங்கள் துவக்குகின்றனர்.
இந்த போலி நிறுவனங்கள் வாயிலாக, மாதம் தலா 3 - 4 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக கணக்கு காட்டுகின்றனர்.
இழப்பு
இதன் அடிப்படையில் ஜி.எஸ்.டி., வரிப் பலன்களுக்கு விண்ணப்பித்து, பல கோடி ரூபாயை அரசிடம் இருந்து முறைகேடாக பெறுகின்றனர்.
அதோடு, இவர்கள் துவங்கிய போலி நிறுவனங்களை 90,000 ரூபாய் வரை மற்றவர்களிடம் விற்பனை செய்கின்றனர்.
![]()
|
இந்த போலி நிறுவனங்களை வாங்குவோர், வரி ஏய்ப்பு செய்வதற்கு இவற்றை பயன்படுத்தி, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தர உதவுகின்றனர்.
இந்த கும்பலிடம், 6 லட்சத்து, 35 ஆயிரம் வருமான வரி நிரந்தர கணக்கு எண்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 2,660 போலி நிறுவனங்களை துவங்கிஉள்ளனர்.
ஜி.எஸ்.டி., வரிப்பலன்களை முறைகேடாக பெற்றதன் வாயிலாக, அரசுக்கு 10,000 கோடி ரூபாய் வரை இவர்கள் இழப்பு ஏற்படுத்தி இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.