வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
.
புதுடில்லி,-உயர் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து பெறுவதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து பெறுவது தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டும் விதிமுறைகளை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழு வெளியிட்டுள்ளது.

150ஆக அதிகரிப்பு
இது குறித்து மத்திய கல்வி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
புதிய தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் இந்த வழிகாட்டும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 20 ஆண்டுகளுக்கும் குறைவான அனுபவம் உள்ள உயர் கல்வி நிறுவனங்களும் நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து பெறுவதற்கு தகுதி பெறுகின்றன. மேலும், தனியார் பல்கலைகளும், மத்திய பல்கலைகள் போல் நிர்வாக கவுன்சில்களை அமைக்கலாம்.
நிகர்நிலை பல்கலைகளுக்கான பேராசிரியர்கள் எண்ணிக்கையும், 100 லிருந்து 150ஆக அதிகரிக்கப்பட்டுஉள்ளது.
அனுபவம்
தனியார் கல்வி நிறுவனங்களுக்கான தொகுப்பூதியமும், 10 கோடி ரூபாயிலிருந்து, 25 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தரம், செயல்பாடு, ஆராய்ச்சி ஆகியவற்றில் பல்கலைகள் அதிக முக்கியத்துவம் செலுத்தும் வகையில் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து யு.ஜி.சி., தலைவர் ஜக்தீஷ் குமார் கூறுகையில், ''உயர் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், நிகர்நிலை பல்கலை அந்தஸ்து பெறுவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
இதற்கு முந்தைய விதிமுறைகளின் படி, குறைந்தது 20 ஆண்டுகள் அனுபவம் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே, நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்தை பெற முடியும்