உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பங்குச் சந்தையில் அதானி குழுமம் முறைகேடு செய்ததாக, பொய்யான செய்திகளை ஆதாரமாக வைத்து, பார்லி மென்டில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன; அத்துடன், உச்ச நீதிமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக வழக்கும் தொடர்ந்தன.

உடனடியாக, இதுதொடர்பாக ஒரு உயர்மட்ட குழுவை நியமித்து ஆராயச் சொன்னது, உச்ச நீதிமன்றம். தற்போது, 'அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை' என, அந்தக்குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதன் வாயிலாக, ராகுல் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது உயர்மட்டக் குழு.
இரண்டாவதாக, மத்திய அரசு அமல்படுத்திய, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான, 1௦ சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கையும், மேல் முறையீட்டு மனுவையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
மூன்றாவதாக, 'புதிய பார்லிமென்ட் கட்டடத்தை, ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும்; அதை பிரதமர் திறந்து வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொது நல மனுவையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அத்துடன், இதுபோன்ற தேவையற்ற வழக்குகளை தொடுத்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக, அபராதம் விதிக்காமல் இருந்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும், மனுதாரரிடம் கண்டிப்புடன் கூறியுள்ளனர் நீதிபதிகள்.
புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை வேண்டுமென்றே, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக புறக்கணித்த, 19 எதிர்க்கட்சிகளுக்கு, இதைவிட சரியான சம்மட்டி அடி எதுவும் இருக்க முடியாது.
இதேபோல, சில ஆண்டுகளுக்கு முன், ரபேல் போர் விமானம் வாங்கியதில், பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், அவற்றுக்கு துணை போகும் சில ஊடகங்களும், பொய்யான தகவலை பரப்பின.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில், முறைகேடு நடைபெற்றதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை' என்று தீர்ப்பளித்து, காங்கிரசுக்கு மூக்கறுப்பை ஏற்படுத்தியது.

ஊழலில் ஊறித் திளைத்த காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், எப்படியாவது பிரதமர் மோடியின் மீதும், மத்திய அரசின் மீதும், வீண் களங்கத்தை சுமத்த வேண்டும் என, துடியாய் துடிக்கின்றன.
ஆனாலும், ஒன்பது ஆண்டு பா.ஜ., ஆட்சியில், பிரதமர் மற்றும் மத்திய அரசின் மீது எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாததால், எந்த விதமான ஆதாரமும் இல்லாமல், எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளும், நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளும் புஸ்வாணமாகி வருகின்றன. இதனால், மனம் ஒடிந்து போய், செய்வது அறியாமல், திகைத்து நிற்கின்றனர் எதிர்க்கட்சியினர். அய்யோ... பாவம்!