வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''ஆடி அசைஞ்சு, 'லேட்'டா தாம்வே வாராவ...'' என்றபடியே சூடான மெது வடையை மென்றார் அண்ணாச்சி.
![]()
|
''யாருன்னு சொன்னீர்னா நன்னா இருக்கும் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''சென்னை அண்ணா சாலையில, மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகமான, 10 மாடி கட்டடம் இருக்குல்லா... அங்க பணியாற்றும் ஊழியர்களுக்கு காலை, 10:30லிருந்து, மாலை, 5:45 வரைக்கும் தாம்வே வேலை நேரம்...
''ஆனா, சில பணியாளர்கள் தினமுமே, 11:30க்கு தான் வாராவ... 'லேட்'டா வந்துட்டு, சரியான நேரத்துக்கு வந்தது போல, வருகை பதிவேட்டில் பதிவு பண்றாவ... அப்புறமாவது வேலையை பார்க்குறாவளான்னா அதுவும் இல்ல வே...
''கொஞ்ச நேரம், 'ஓபி' அடிச்சிட்டு, ஒரு டீயை குடிச்சிட்டு, சொந்த வேலையை பார்க்க கிளம்பிடுதாவ... அலுவலக கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செஞ்சாலே அந்த, 'சின்சியர் சிகாமணிகள்' யாருன்னு தெரிஞ்சிடும் வே...'' என்றார் அண்ணாச்சி.
''மலர் கண்காட்சியில நடந்த குளறுபடி தெரியுங்களா...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''அப்படி என்ன நடந்துச்சு பா...'' எனக்கேட்டார் அன்வர்பாய்.
''நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், மே, 19ல் துவங்கி, 23 வரை, 125வது மலர் கண்காட்சி நடந்துச்சுங்க... மலர்களை பார்வையிட ஆயிரக்கணக்குல ஜனங்க குவிஞ்சாங்க...
''மே, 20ல், கலெக்டர் அனுமதி இல்லாம, பூங்காவுக்குள் ரெண்டு, 'ட்ரோன்'களை பறக்க விட்டு, படம் பிடிச்சிருக்காங்க... பக்கத்துலயே கவர்னர் மாளிகையான ராஜ்பவன் இருக்குதுங்க... அதனால, அனுமதி இல்லாம, 'ட்ரோன்' பறக்கவிடுறது சட்ட விரோதம்...
''இவ்வளவு நாள் கழிச்சு இந்த விவகாரம் இப்ப சர்ச்சையாகிடுச்சு... மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டதால, போலீஸ் தரப்பு விசாரணையை துவங்கிடுச்சுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''தி.மு.க., மாவட்ட செயலரை மாற்றச் சொல்லி, உடன் பிறப்புகளே அடம் பிடிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலரா நல்லசிவம் இருக்காரோன்னோ... இவர் இந்த பொறுப்புக்கு வந்த பிறகு, ரெண்டு சட்டசபை தேர்தலையும், ஒரு லோக்சபா தேர்தலையும் பார்த்துட்டார் ஓய்...
''கடந்த, 2016 சட்டசபை தேர்தல்ல, ஈரோடு வடக்கு மாவட்டத்துல இருக்கற நாலு தொகுதி யையும், அ.தி.மு.க., பிடிச்சிடுத்து... 2021 சட்டசபை தேர்தல்ல, அந்தியூர் தொகுதி மட்டுமே, தி.மு.க.,வுக்கு கிடைச்சது... மிச்ச மூணு தொகுதியும் வழக்கம் போல, அ.தி.மு.க.,வுக்கு போயிடுத்து...
![]()
|
''ஈரோடு வடக்குல, தி.மு.க., தலைதுாக்க முடியாததுக்கு நல்லசிவத்தின், 'நல்ல' செயல்பாடே காரணம்னு தலைமைகிட்டயே கட்சிக்காரா புகார் வாசிச்சுட்டா... ஆனாலும், கோபி மற்றும் டி.என்., பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், முதல்வர் சமீபத்துல பேசினப்ப, மாவட்ட செயலர் நல்லசிவத்தை, 'ஆஹா, ஓஹோ'ன்னு புகழ்ந்துட்டு போயிட்டார்...
''இது, அதிருப்தியில இருந்த கட்சிக்காராளுக்கு கடுப்பை கிளப்பிடுத்து... 'நல்லசிவத்தை மாத்தாட்டி, 2024 லோக்சபா தேர்தல்ல, ஈரோடு தொகுதியை, தி.மு.க., மறந்துட வேண்டியது தான்'னு, உடன்பிறப்புகள் உறுதியா சொல்லிட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement