சென்னை--தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக, சென்னையில் நேற்று, 108 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 42 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. இது, ஜூன் மாதத்தில், ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் பதிவான அதிகபட்ச வெப்பநிலை.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது, 108 டிகிரி பாரன்ஹீட்.
புதுச்சேரி, திருத்தணி, 41; கடலுார், வேலுார், 40; ஈரோடு, நாகை, பரங்கிப்பேட்டை, 39; தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், கரூர் பரமத்தி, காரைக்கால், மதுரை, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. 15 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. வரும் நாட்களில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, சில இடங்களில்
மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில், அதிகபட்சம், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை வரை பதிவாகும்.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே வரும், 6ம் தேதி வரை மேற் கண்ட பகுதிகளுக்கு மீனவர் கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில், 2014 ஜூனில், 42 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. அதன்பின், ஒன்பது ஆண்டுகளுக்கு பின், ஜூனில் நேற்று, 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த 1948ம் ஆண்டில், 43 டிகிரி செல்ஷியஸ் பதிவானதுதான், சென்னை யில் ஜூன் மாத அதிகபட்ச வெப்பநிலை.