வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரயில் விபத்து நடந்தது எப்படி?
பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது, பகாநகர் பஜார் ஸ்டேசன் அருகே உள்ள மெயின் லைனிற்கு பதிலாக, லூப் லைனில் நுழைந்து, அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதுவே விபத்திற்கு முக்கிய காரணம்.
இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே துவங்கியுள்ளது. மனித தவறுகள் காரணமாகவோ அல்லது சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பதை அறிய ரயில்வே முயற்சித்து வருகிறது.
இந்த இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மூன்றாவது ரயிலாக அங்கு விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது.
யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகளின் தடம் புரண்ட பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகி எதிர் பாதையில் விழுந்ததாக ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
சரக்கு ரயில் உடன் ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேருக்கு நேர் மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 7, 8 பெட்டிகள் தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரத்தில் இதே எதிர் தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் வந்துள்ளது.
அதனை நிறுத்த முடியாத நிலையில் தான் ஏற்கனவே தடம் புரண்டிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்து ஏற்பட யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலின் 2 , 3 பெட்டிகள் தடம் புரண்டன. முதல்கட்ட தகவல்படி, இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. ரயில்வேயின் விசாரணைக்கு பிறகே விரிவான தகவல் தெரியவரும்.
கோரமண்டல் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், மணிக்கு 128 கி.மீ., வேகத்திலும், பெங்களூரு ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 116 கி.மீ., வேகத்திலும் பயணித்தது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் 135 பேர் ரயிலில் பயணித்தனர் என்று கூறப்படுகிறது. முழு தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இதில் இறந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள், காயமுற்றவர்கள் யார் என்ற விவரமும் வெளியாகவில்லை. மேலும் ரயில் நிலையத்தில் தவிக்கும் தமிழக மக்களை கண்டறியும் பணியும் நடக்கிறது.
இதனிடையே, ஒடிசாவில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் ஒன்று, பத்ராக் என்ற இடத்தில் இருந்து கிளம்பி உள்ளது. இந்த ரயில்,நாளை( ஜூன் 4) காலை 9 மணியளவில் சென்னை, டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.