புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சிக்கிய பயணியரை மீட்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு:
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக நலமடையவும் பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி:
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும்.
விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் பேசினேன். மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அமித்ஷா:
ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது
இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளா முதல்வர்:
ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் கேரளா, ஒடிசா உடன்
உறுதுணையாக இருக்கும் எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

ராகுல்:
ஒடிசாவின் பாலசோரில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான சோகச் செய்தியால் வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என காங்., முன்னாள் எம்.பி ராகுல் கூறியுள்ளார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி
தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் முதல் விபத்து நடந்த பிறகு அடுத்தடுத்து மேலும் இரு தொடர்வண்டிகள் செல்ல எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பழனிசாமி
ஒடிசா ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். தமிழகத்தை சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
அண்ணாமலை:
கோல்கட்டாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒதிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா
ஒடிசாவின் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு மனவேதனை அடைந்தேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பாஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா கூறியுள்ளார்.
ராமதாஸ்
விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த அனைவரும் உடல்நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களில் தமிழகத்தில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு முறையே ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சோனியா:
ஒடிசாவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என காங். மூத்த தலைவர் சோனியா கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் கூறியுள்ளார்.
விராட் கோலி
ஒடிசா ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு மன வேதனை அடைந்தேன்; தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல்; விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
நேபாள பிரதமர்:
இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் ஏராளமானவர்கள் உயிர்கள் பலியாகியிருப்பது தனக்கு வருத்தமளிக்கிறது. இந்த துக்க நேரத்தில் விபத்தில் இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நேபாள பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா கூறினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தின் படங்கள், அறிக்கைகள் இதயத்தை உடைக்கிறது. இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்களுடன் துணை நிற்போம். இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். எனக்கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்
மோசமான ரயில் விபத்திற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களின் நினைவாக எனது எண்ணங்கள் உள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி
ஒடிசாவில் ரயில் விபத்து கவலை அளிக்கிறது. உயிர் இழந்தவர்கள் குடும்பங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக மீள்வார்கள் என நம்புகிறோம். இந்த துயரமான நேரத்தில் இந்தியா உடன் இலங்கை துணை நிற்கிறது.
தைவான் சை இங் வென்
இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், உக்ரைன் மக்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இழப்பின் வலியை உங்களோடு நாங்கள் பகிர்ந்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்
ரஷ்ய அதிபர் புடின்
இந்தியாவின் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் .
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்; படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்
ஜப்பான் பிரதமர் கிஷிடா
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் விலை மதிப்பில்லாத பல உயிர்கள் மடிந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அரசு சார்பிலும், ஜப்பான் மக்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.