ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 288 பேர் பலியாகினர் . 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்தெரிவிக்கிறது. இதனையடுத்து இந்த கோர விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் OmShanthi என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
பெங்களூரில் இருந்து, மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி ரயில் எண் 12864 என்ற பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்ற போது, மாலை 7:00 மணிக்கு பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அந்த ரயிலின் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தின் மீது கவிழ்ந்தன.
![]()
|
கோல்கட்டா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி, எதிர்புறத்தில் இருந்து ரயில் எண் 12841 என்ற ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில், தடம்புரண்டு கிடந்த பெங்களூரு - ஹவுரா ரயில் மீது பயங்கரமாக மோதியதில் இதன் பெட்டிகளும் கவிழ்ந்தன.
மோதிய வேகத்தில், கோரமண்டல் எக்ஸ்பிரசின் பெட்டிகள், அடுத்த தடத்தில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. மூன்று ரயில்களும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி கவிழ்ந்தன.சில நிமிடங்களில் அந்த பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. எந்த பக்கம் திரும்பினாலும், அழு குரல்களும், உதவி கோரும் பயணியரின் கதறலும் காண்போர் மனதை நொறுக்கியது. இதனையடுத்து இந்த கோர விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் OmShanthi என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் விபத்தில் பலியான 288 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.