வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாலசோர்: ‛‛ ஒடிசாவில் ரயில் மோதிக்கொண்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் '', என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஆய்வு
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிகள், நிவாரணம், ரயில் விபத்து, சிக்னலை தாண்டி ரயில் எப்படி சென்றது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றார். இதையடுத்து, ரயில் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உருக்குலைந்து சேதமடைந்து கிடந்த ரயில் பெட்டிகளை பிரதமர் பார்வையிட்டார்.
விளக்கம்
ரயில் விபத்து, மீட்பு பணி மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
உத்தரவு
ஆய்வு செய்த இடத்தில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரவை செயலாளருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது, காயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அசவுகரியத்தை எதிர்கொள்ளாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆறுதல்
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் பெறுவோரை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.
வலியை உணர்கிறேன்
பிறகு பிரதமர் மோடி கூறியதாவது: விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த வேதனையையும் நானும் உணர்கிறேன். காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சையை அரசு அளிக்கும். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.
ஒடிசா மாநில நிர்வாகத்துடன் பேசி உள்ளேன். அது குறித்த நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும். மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுடனும் பேசி உள்ளேன். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அரசு ஒரு போதும் கைவிடாது. மீட்பு பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி. காயம் அடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ளேன். தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
அனைத்து விதமான விசாரணைகளும், அனைத்து கோணங்களிலும் முடுக்கி விடப்பட்டு உள்ளன. விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். . இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.