சென்னை:கோவையில், விளம்பரப் பலகை விழுந்து மூன்று பேர் பலியான சம்பவத்தை அடுத்து, சட்ட விரோத விளம்பரப்பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், காணும் இடமெல்லாம் ராட்சதவிளம்பரப் பலகைகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விளம்பரப்பலகைகளுக்கு, உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டாலும், நீதிமன்ற நிலுவை வழக்குகளை காட்டி, சில விளம்பரப் பலகைகள் அகற்றப்படாமல் இருந்தன.
ஆனால், சமீப காலமாக, தமிழகம் முழுதும் நெடுஞ்சாலைகளிலும், நகர்ப்புறங்களிலும் ராட்சத அளவுள்ள விளம்பரப்பலகைகள் அதிகளவில் உருவெடுத்துள்ளன.
ராட்சத துாண்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், விளம்பரப் பலகைகளின் ஆதிக்கமும், அத்துமீறலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி அப்புறப்படுத்துவதும், மிக விரைவிலேயே மீண்டும் புதிய விளம்பரப்பலகைகள் முளைப்பதுமாக நீடிக்கிறது.
சைதாப்பேட்டை துவங்கி, எல்.ஐ.சி., பகுதி வரையிலான அண்ணா சாலையின் இரண்டுபக்கங்களிலும், 75க்கும் மேற்பட்ட பிரமாண்ட விளம்பரப் பலகைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, அண்ணா மேம்பாலத்திற்கு அருகில்மட்டுமே, 15க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் அச்சுறுத்தி வருகின்றன.
சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் வரையிலான சாலைகளில் விளம்பரப் பலகைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலம், செட்டிபேடு, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம் பகுதியில், நெடுஞ்சாலையோரம் இரும்பு கம்பங்களுடன், 40 அடி உயரத்தில் 'மெகா சைஸ்' விளம்பரப் பலகைகள் வானுயர்ந்து நிற்கின்றன.
இது போல மதுரை, திருச்சி, சேலம், நெல்லை மாவட்டங்களில் முக்கிய பகுதிகளில், 'பேனர்'கள் கட்டப்பட்டு, விழாக்கள் நடக்கின்றன.
சாலைகளை ஒட்டியுள்ள கட்டடங்களில், விதிமுறையை மீறி ராட்சத துாண்கள் அமைத்து, இரும்பு சாளரங்களில் விளம்பரப் பலகைகள், அந்தரத்தில் இருந்து முகம் காட்டும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
இதே போல, விளம்பரப் பேனர்களும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்திய கோடை மழையில் விளம்பரப் பேனர்கள் மட்டுமின்றி, விளம்பரப் பலகைகளும் முறிந்து விழுந்தன. கடந்த மே 16ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே, கரசங்காலில் கோடை மழையின் போது பிரமாண்டமான விளம்பரப் பலகை உடைந்து விழுந்தது.
மூன்று பேர் பலி
உயிர் பலி ஏற்படாவிட்டாலும், மின்கம்பம் மீது விழுந்ததில், அப்பகுதியே இருளில் மூழ்கியது.
கோவை மாவட்டம்கருமத்தம்பட்டியில், நேற்று முன்தினம் பிரமாண்ட விளம்பரப்பலகை சரிந்து விழுந்ததில், மூன்று பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்துக்கு பிறகாவது, விளம்பரப் பலகைகள் விஷயத்தில் தமிழக அரசு விழித்துக் கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.