சென்னை: ''ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு, தலா ஐந்து லட்சம் ரூபாய்; காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலையில், முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்றார். அந்த அறையில், தமிழக அரசு சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறை உயர் அலுவலர் ஒருவரை நியமிக்க உத்தரவிட்டார்.
சென்னை எழிலகத்தில் உள்ள, மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு சென்றார். அங்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்தார். தொலைபேசியில், ஒடிசா மாநில தலைமைச் செயலரிடம், மீட்பு நடவடிக்கைள் விபரங்களை கேட்டறிந்தார்.
பின் முதல்வர் அளித்த பேட்டி:
அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, வருவாய் துறை செயலர் குமார் ஜயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகியோர், ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த பாலசோர் பகுதியில், நான்கு அல்லது ஐந்து நாட்கள் தங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள காவல் துறையினருடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள, தமிழகத்தை சேர்ந்த கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் சென்றுள்ளார். வந்து சேர முடியாதவர்களையும், விபத்து நடந்த இடத்தில் இருந்து, சென்னை திரும்ப இயலாதவர்களையும் அழைத்து வர, சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான, மருத்துவ சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் உடல்களை கொண்டு வரவும், தமிழக அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
விபத்து குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள, 94458 69843, 1070 ஆகிய தொலைபேசி எண்களையும், 94458 69848 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணையும்தொடர்பு கொள்ளலாம்.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு, தமிழக அரசு சார்பில், ஐந்து லட்சம் ரூபாய்; காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.