வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாலசோர்: ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்தில், பல குழப்பங்கள், சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், 'மெயின்' பாதையில் செல்லாமல், மாற்றுப் பாதையில் வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 'சிக்னல்'கள் சரியாக இருந்தபோதும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பாதை மாறியதா என, தென் கிழக்கு ரயில்வே அதிகாரிகள் உச்சகட்ட குழப்பத்தில் உள்ளனர்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இது, கடந்த பல ஆண்டுகளில் நடந்துள்ள மிக கோரமான விபத்தாக கருதப்படுகிறது.

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் எண் 12841 என்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து மேற்கு வங்கம் ஹவுராவுக்கு செல்லும் ரயில் எண் 12864 என்ற யஷ்வந்த்புர் - ஹவுரா அதி விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கின.
முதல் கட்ட விசாரணையில், ஹவுரா - சென்னை மார்க்கத்தில், 'அப்' எனப்படும் மேல்நோக்கி செல்லும் ரயில் பாதையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்றுள்ளது. அதே நேரத்தில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், 'டவுன்' எனப்படும் கீழ்நோக்கி செல்லும் ரயில் பாதையில் பயணித்துஉள்ளது.

இந்நிலையில், ஹவுராவை நோக்கி செல்லும்சரக்கு ரயில் ஒன்று, 'லுாப் லைன்' எனப்படும் மாற்றுப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக ரயில்கள் சேவை துரிதமாக இருக்கும் வகையில், ரயில் நிலையங்களில் அப் மற்றும் டவுன் பாதைகளுடன், சிக்னல் கிடைத்து செல்லும் ரயில்களுக்கு மற்ற ரயில்கள் இடம் விட்டுச் செல்லும் வகையில், லுாப் லைன் பாதை இருக்கும். அதே நேரத்தில் பாஹாநகர் பஜார் ரயில் நிலையத்தில் நான்கு பாதைகள் உள்ளன.

இதில், சென்னை நோக்கி செல்லும் பாதையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மணிக்கு 128 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளது. எதிர் திசையில் ஹவுரா நோக்கி செல்லும் பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், மணிக்கு 116 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம்அருகே, திடீரென மாற்றுப் பாதைக்குள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புகுந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அப்போது அந்தப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதனால், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு, ஹவுரா நோக்கி செல்லும் பாதையிலும் விழுந்துள்ளன.

சில நிமிடங்களுக்குள் அந்த வழியில் வந்த அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது வேகமாக மோதியுள்ளது. இதனாலேயே அதிக பாதிப்பும், அதிக உயிர் பலியும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
முதல்கட்ட விசாரணைதொடர்பான அறிக்கையை, தென் கிழக்கு ரயில்வே அதிகாரிகள், ரயில்வே வாரியத்துக்கு அனுப்பிஉள்ளனர். அதில், இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தை பார்க்கும்போது, மாற்றுப் பாதையில் தான், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்றுள்ளதாக தெரியவருகிறது. அதனால் தான், மோதிய வேகத்தில், கோரமண்டல்எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின், சரக்கு ரயில்இன்ஜின் மீது ஏறியுள்ளது.முக்கிய பாதையில், சிக்னல் கோளாறு ஏதும் இல்லை. சிக்னல் சரியாக இயங்கியதுடன், செல்வதற்கு அனுமதி கிடைத்ததால்தான், இரண்டு ரயில்களும் வேகமாக சென்றுள்ளன. ஆனால், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென மாற்றுப் பாதைக்குள் நுழைந்தது ஏன் என்பதுதான், தென் கிழக்கு ரயில்வே அதிகாரிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், அதன்பிறகு அது விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், குழப்பமடைந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனர், மாற்றுப் பாதைக்குள் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சாதாரணமாக ரயில் தடம் புரண்டாலும், ஒரு சில பெட்டிகள், ரயில் பாதையில் இருந்து விலகி இருக்கும்.ஆனால், இத்தனை பெட்டிகள் கவிழ்ந்து, அருகில் உள்ள ரயில் பாதையிலும் விழுந்துள்ளன. அதனால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதியதே, அதிக பெட்டிகள் கவிழ்வதற்கு காரணமாக இருக்கும் என, அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு, ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் தான், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து தெரியவரும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
யாரும் தப்ப முடியாது

இந்த கோர விபத்தால் எனக்கு ஏற்பட்டுள்ள வலியை, வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் தவிக்கிறேன். இந்த சம்பவத்தை மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்துள்ளது. விபத்துக்கு காரணமான எவரும் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரை மீட்க முடியாது. அதே நேரத்தில் அவர்களுடைய குடும்பத்தாருக்கு உரிய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து நமக்கு மிகப் பெரிய பாடமாகும். இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மீட்புப் பணியில் ஒடிசா அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. காயமடைந்தோருக்கு தேவையான ரத்தத்தை தானமாக வழங்க உள்ளூர் மக்கள் குவிந்துள்ளனர். அவர்களை வெறும் வார்த்தைகளால் பாராட்டினால் போதாது.

பிரதமர்