அமிர்தசரஸ், பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 200 பேரையும், பஞ்சாபின் வாகா எல்லையில், நம் எல்லை பாதுகாப்புப் படையினரிடம் அந்நாட்டு அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, நம் மீனவர்களை அந்நாட்டின் கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர்.
இதையடுத்து, அங்குள்ள சிறைகளில் நம் மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை விடுவிக்க மத்திய அரசு துாதரக ரீதியில் பேச்சு நடத்தியது.
இதையடுத்து, சமீபத்தில் பாகிஸ்தான் சிறையில் இருந்த 198 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதன் இரண்டாம் கட்டமாக, மேலும் 200 இந்திய மீனவர்களுடன், பொதுமக்கள் மூன்று பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை, இந்திய துாதரகத்தின் சிறப்பு அனுமதி பெற்று, சாலை மார்க்கமாக பஞ்சாபின் வாகா எல்லையில், நம் எல்லை பாதுகாப்புப் படையினரிடம் அந்நாட்டு அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர்.
அப்போது, நம் எல்லைக்கு வந்த மீனவர்கள், தரையை தொட்டு வணங்கி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
பின், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.