வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்த வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...
என்.அகத்தியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பிரதமர் மோடி, ஒரு உலக மகா நடிகர்; அவரது நடிப்புக்கு, 'ஆஸ்கர்' விருதே கொடுக்கலாம்' என, திருவாய் மலர்ந்துள்ளார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். 'எம்.ஜி.ஆரை, 'எத்தர் திலகம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அழைத்தார்.
அந்த எத்தர் திலகம் பட்டத்தை, பிரதமர் மோடிக்கும் தாராளமாக வழங்கலாம்' என்றும், நக்கல், நையாண்டி செய்திருக்கிறார், இந்த அறிவு ஜீவி. திருமாவளவன், எப்பேர்ப்பட்ட நடிகர் என்பது நமக்கு தெரியாதா... உலகில் பிரபலமான தலைவர்கள் வரிசையில், முதல் இடம் பிடித்துள்ள பிரதமர் மோடியை பற்றி விமர்சனம் செய்ய, கொஞ்சமும் தகுதி இல்லாதவர் இவர்.
![]()
|
பிரதமர் மோடியோ, தமிழின் பெருமையையும், தமிழர்களின் கலாசாரத்தையும் உலகறியச் செய்தவர். தமிழ் மன்னர்கள் பயன்படுத்திய செங்கோலை, புதிய பார்லி மென்டில், சபாநாயகர் இருக்கை அருகே நிறுவி பெருமைப்படுத்தியவர். இதன் வாயிலாக, எந்த பிரதமரும் செய்யாத மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஹிந்து மத விரோதியான திருமாவளவனுக்கு, 'நையாண்டி திலகம்' என்ற பட்டத்தை தாராளமாக வழங்கலாம். தமிழக அரசு வழங்கும், 'கலைமாமணி விருது' போல, மற்றவர்களை வசைபாடி மகிழும் இந்த மகானுபாவருக்கு, 'வசைமாமணி' என்ற பட்டத்தையும் வழங்கி, 'பெருமை'ப்படுத்தலாம்.
தி.மு.க., கூட்டணியில் இருந்தபடியே, திராவிட மாடல் அரசை விமர்சனம் செய்யும், இந்தப் புண்ணியவானை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. பிரதமர் மோடியை, திருடன் என விமர்சனம் செய்து, அதனால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, எம்.பி., பதவியை இழந்த ராகுல் போல, தமிழகத்தில் ஜாதி அரசியலை வளர்த்து, அதில் குளிர் காய்ந்து வரும் இந்தப் பிரகஸ்பதியும், ஒரு நாள் தண்டிக்கப்படுவார் என்பது நிச்சயம்.
'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை...' என்று, எம்.ஜி.ஆர்., பாடிய பாடலை போல, பிரதமர் மோடியை எவ்வளவு தரக்குறைவாக விமர்சனம் செய்தாலும், அவரது பெருமையும், புகழும் சற்றும் குறையப் போவதில்லை. தமிழர்களின் நெஞ்சங்களில், தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்ட பிரதமர் மோடியை, அசைத்து பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது.