ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் ஸ்டேஷன் அருகே தான், இந்த கோர விபத்து நடந்தது. ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய சத்தம் கேட்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் ராணாஜித் கிரி என்பவர் கூறியதாவது:
விபத்து நடந்த இடத்துக்கு சற்று அருகில் தான் டீக்கடை வைத்துள்ளேன். சத்தம் கேட்டதும், உடனடியாக நானும், மற்றவர்களும் ஓடிச் சென்றோம்.
அங்கு நாங்கள் பார்த்த காட்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, இரும்புக் குவியல்கள் போல் காட்சியளித்தன. ஒரே மரண ஓலமாக இருந்தது.
காயம் அடைந்தவர்கள் வேதனையில் உதவிக்குரல் எழுப்பினர். நாங்கள் பலரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு, கிடைத்த வாகனங்களில் வைத்து அழைத்துச் சென்றோம்.
சிலரை மீட்டபோது, தங்கள் உடன் வந்தவர்களையும் மீட்கும்படி கெஞ்சினர். ஆனால், இருட்டி விட்டதால் எங்களால் முழுமையாக மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. நான் மட்டுமல்ல, எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர், நுாற்றுக்கணக்கானோரை மீட்டு, மருத்துவமனைகளில் அனுமதித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-------
ரத்த தானம் செய்ய
குவிந்த மக்கள்
ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு ரத்தம் தேவைப்படுவதால், ரத்த தானம் செய்யும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த பலர், ரத்த தானம் செய்வதற்காக மருத்துவமனைகளின் முன் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று, ஏராளமானோர் ரத்த தானம் அளித்தனர்.
------
மொபைல் போன் மாயம்
விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த பெரும்பாலான பயணியர், தங்கள் மொபைல் போன்களை, 'பேக்' அல்லது படுக்கைக்கு கீழ் வைத்து விட்டு, துாங்கி விட்டனர். ரயில் விபத்தில் சிக்கியதும், அவர்களால் மொபைல் போன்களை கண்டுபிடிக்க முடியவில்லை. உயிர் தப்பினால் போதும் என, சேதமடைந்திருந்த பெட்டிகளில் இருந்து வெளியேறினர்.
மொபைல் போன் இல்லாததால், பலர், தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் அங்கும், இங்கும் பரிதவித்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது. உள்ளூர் மக்கள் சில குழந்தைகளை மீட்டு, பத்திரமாக வைத்திருந்தனர். அந்த குழந்தைகளுடன் வந்த குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது நிலை என்ன என்றும் தெரியவில்லை. இதனால் அந்த குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தது, காண்போரின் கண்களை குளமாக்கியது.