''முதல்வர் மருத்துவ காப்பீடு பதிவு பண்றதுக்குள்ள, கையில இருக்கிற காசு மொத்தத்தையும் கறந்துடறா ஓய்...'' என, பெஞ்சில் அமர்ந்தவுடன் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''விஷயத்தை விபரமா சொல்லுங்க பா...'' எனக்கேட்டார் அன்வர்பாய்.
''திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துல, முதல்வர் மருத்துவ காப்பீடு பதிவு ஆபீஸ் இருக்கோன்னோ... இங்க பதிவு செஞ்சுக்க தினமும் ஏராளமான ஜனங்க போறா ஓய்...
''அப்படி போறவா கையில, திருப்பூர் தெற்கு தொகுதி ஆளுங்கட்சி, 'பெரும்புள்ளி'யின் உதவியாளர் சிபாரிசு கடிதம் இருந்தா, சுலபமா பதிவு செய்துக்க முடியறது... இல்லாட்டி, 'புரோக்கர்'கள் மூலமா, 2000 ரூபாய் வரை, 'மொய்' எழுதினா தான் காரியம் நடக்கறது...
''சாதாரண ஜனங்க, 'டோக்கன்' வாங்கவே, ரெண்டு - மூணு நாள் அலையவிடறா... ஒரு வாரம் அலைஞ்சு திரிஞ்சு நாள்பூரா காத்திருந்த தான், காப்பீடுக்கு பதிவு செய்ய முடியறது ஓய்...
''மாவட்ட திட்ட அலுவலர்கள் வேறு இடத்துல இருக்கறதால, யாருடைய கண்காணிப்பும் இல்லாம, இங்க வசூலை வாரி குவிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணா, ''தம்பி பக்ருதீன், குடிக்கறதுக்கு கொஞ்சம் தண்ணி கொண்டு வரேளா...'' என,
நண்பரை கேட்டார்.
![]()
|
''படிச்ச அதிகாரி வந்தா, எல்லா சரியாகிடும்னு நினைச்சாங்க... ஆனா...'' என, இழுத்தார் அந்தோணிசாமி.
''என்ன வே இழுக்குதீரு...'' எனக்கேட்டார் அண்ணாச்சி.
''ஓசூர் மாநகராட்சியின், 'டாப்' அதிகாரியா இருந்தவரை சமீபத்துல மாத்திட்டாங்க... அந்த இடத்துக்கு, ஐ.ஏ.எஸ்., படிச்ச ஒரு அம்மாவை நியமிச்சாங்க... 'படிச்சவங்க அதிகாரியா வந்தா, கோவை போல ஓசூர் மாநகராட்சியும் சும்மா வேற, 'லெவல்'க்கு போயிடும்'னு கட்சி பாகுபாடு இல்லாம, கவுன்சிலர்கள் கனவு கண்டாங்க...
''ஆனா, பணியில் கண்டிப்பானவரை போல காட்டிக்கொள்ளும் அந்தம்மா, சொதப்புறாங்களாம்... வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துறதில்லையாம்... பல மாதங்களுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
நிதி ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு, 'டெண்டர்' விடாம இழுத்தடிக்குறாங்களாம்...
''நிலைமை இப்படியே போனா, தி.மு.க., அரசுக்கு தான் பேரு, 'ரிப்பேர்' ஆகிடும்னு முன்னர் புகழ்ந்த கவுன்சிலர்கள், இப்ப புலம்புறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''தலைமை சொன்னா, அப்படியே கேட்டுக்கணுமான்னு முரண்டு பிடிக்குறாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''தி.மு.க., நெசவாளர் அணிக்கான திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவர், துணை தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிச்சாங்க பா...
''கட்சி தலைவர் முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலை பெற்று தான், அணியின் மாநில செயலர், நன்னியூர் ராஜேந்திரன் இந்த அறிவிப்பை வெளியிட்டாரு... அது, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியிலும் வெளியாச்சு பா...
''ஆனா, பூந்தமல்லி ஒன்றிய தி.மு.க., நிர்வாகி ஒருத்தர் மட்டும், 'இந்த நியமனத்தை ஏத்துக்க முடியாது'ன்னு, முரண்டு பிடிக்குறாரு... மரியாதை நிமித்தமா சந்திச்சு அவரை சமாதானப்படுத்த, 'அப்பாயின்மென்ட்' கேட்டாங்க...
''அதுக்கு அவரு, 'நியமனத்தையே ஏத்துக்காத போது, உங்களை எல்லாம் எதுக்கு சந்திக்கணும்'னு, 'கெத்தா' மறுத்துட்டாரு... தலைமையின் நியமனத்தை ஏற்க மறுக்கும் நிர்வாகியின் துணிச்சலை பார்த்து, கட்சிக்காரங்களே கொஞ்சம் மிரண்டு தான் போயிட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''என்ன ஓய் இது... ஸ்டாலின் பேச்சுக்கே கட்சியில மதிப்பு இல்லியா...'' என, குப்பண்ணா எழ, சபை கலைந்தது.