புதிய பார்லிமென்ட் கட்டடம் வெகு விமரிசையாக திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து பல ஆதீனங்கள் பங்கேற்ற இந்த விழாவில், பிரதமர் மோடி லோக்சபாவில் செங்கோலை நிறுவினார்.
இந்த விழாவிற்கு வந்திருந்த ஆதீன தலைவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புவதற்கு முன்பாக பிரதமர் மோடியை தனியாக சந்திக்க விரும்பினர்.
பா.ஜ., முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆதீனங்களின் விருப்பத்தை மோடிக்கு தெரியப்படுத்த, அவரும் உடனே சந்திக்க ஒப்புதல் தந்து நேரம் ஒதுக்கினாராம்.
ஆதீன தலைவர்கள் அனைவரும் பிரதமரை தனித்தனியாக சந்தித்தனர். ஒவ்வொருவரிடமும் 10 நிமிடங்கள் பேசினாராம் மோடி. அனைவரிடமும், 'வெற்றி வேல், வீரவேல்' என தமிழில் மோடி முழங்க, ஆதீனங்கள் மகிழ்ச்சி அடைந்தனராம். அவர்கள் அனைவரின் ஆசியையும் பிரதமர் பெற்றார்.
இந்த சந்திப்பின் போது புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அவைகளை பிரசுரிக்கக் கூடாது என பிரதமர் கட்டளையிட்டாராம். அதனால் தான் இந்த சந்திப்பு பத்திரிகைகளில் வெளிவரவில்லை.