புதுடில்லி, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா, இல்லையா என பார்த்து கூறும்படி, லக்னோ பல்கலையின் ஜோதிடத்துறைக்கு அறிவுறுத்திய அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது,
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால், அந்த பெண்ணை அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றினார்.
பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி அவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார்.
அப்போது, இளைஞர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. இந்த தோஷம் இருப்பவர்களை திருமணம் செய்தால், குடும்பத்துக்கு அழிவு ஏற்படும். அதனால் தான், அந்த பெண்ணை என் கட்சிக்காரர் திருமணம் செய்யவில்லை' என, வாதிட்டார்.
இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணும், அந்த இளைஞரும், தங்கள் ஜாதகத்தை லக்னோ பல்கலையின் ஜோதிடத் துறை தலைவரிடம், 10 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
இதை ஆய்வு செய்து, அந்த பெண்ணுக்கு, செவ்வாய் தோஷம் உள்ளதா, இல்லையா என, பல்கலையின் ஜோதிடத்துறை மூன்று வாரங்களுக்குள், நீதிமன்றத்தில், சீலிடப்பட்ட உறையில் வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அடுத்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது.
அப்போது, 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா, இல்லையா என அறிக்கை அளிக்கும்படி, லக்னோ பல்கலைக்கு உயர் நீதிமன்றம் ஏன் உத்தரவிட்டது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
'உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.