திருப்பூர்:திருப்பூரில், கூலிப்படையை அனுப்பி மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த கணவர் உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மணிமாறன், 38. பனியன் நிறுவன உரிமையாளர். இவரது மனைவி மாங்கனி, 35. இரு மகன்கள் உள்ளனர்.
மொரட்டுப்பாளையத்தில், வீட்டுடன், பனியன் நிறுவனமும் செயல்படுகிறது. கடந்த 2ம் தேதி நள்ளிரவு பனியன் நிறுவனத்துக்கு வேலையாட்களை அழைத்து வருவதாக கூறி விட்டு, மணிமாறன் புறப்பட்டு சென்றார்.
கணவர் சென்ற சிறிது நேரத்தில், துாங்கி கொண்டிருந்த மாங்கனியை தலையணையை வைத்து அமுக்கி இருவர் கொலை செய்ய முயற்சித்தனர். அவர்களிடம் இருந்து தப்பி கூச்சலிட்டார். இருவரும் தப்பி சென்றனர். ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கணவரின் நடவடிக்கை மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், நண்பர் மூலம் கூலிப் படையை அனுப்பி மனைவியை கொலை செய்ய திட்டமிட்டது தெரிந்தது.
கணவர் மணிமாறன், தர்மபுரியை சேர்ந்த நண்பர் வேலு, 34, விவேக், 35, முனிரத்தினம், 27 மற்றும் ஜான் ஜோசப், 45 என, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், ''சமீபத்தில் மணிமாறன் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பார்க்க தந்தை சென்றார். மனைவி மாங்கனி அவரை அனுமதிக்கவில்லை. வீட்டுக்கு சென்ற போதும், சத்தம் போட்டு அனுப்பியுள்ளார். இதற்கிடையே பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெண் ஒருவருடன் மணிமாறன் பழகி வந்தார். கடந்த, 15 நாட்களாக தம்பதியர் பேசிக்கொள்ளவில்லை. மனைவியை கொல்ல திட்டமிட்டு, தர்மபுரியில் உள்ள நண்பர் வேலுவிடம் கூறினார். அவர் விவேக் என்பவர் மூலம் கூலிப்படையை தயார் செய்தார். வேலையாட்களை அழைத்து வருவதாக சென்ற மணிமாறன், அவர்களுடன் காரில் இருந்தார். விவேக் உடன் இருக்க, முனிரத்தினம், ஜான் ஜோசப் ஆகியோர் வீட்டுக்குள் சென்று மாங்கனியை கொல்ல முயன்றது தெரிந்தது'' என்றனர்.