சென்னை: 'வாழ்நாளில் இதுபோன்ற ஒரு பயங்கர விபத்தை சந்தித்ததே இல்லை. எங்களோடு பயணித்தவர்கள், எங்கள் கண்ணெதிரே உயிரிழந்தனர். நாங்கள் வணங்கும் தெய்வம் தான் காப்பாற்றியது' என, ஒடிசா ரயில் விபத்தில் உயிர் பிழைத்த மூன்று பேர், உணர்ச்சி பொங்க கூறினர்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ராஜலட்சுமி, தென்காசியை சேர்ந்த ரமேஷ், ராமநாதபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் ஆகிய மூன்று பேர், நேற்று மதியம், 1:50 மணிக்கு, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில், தங்களது சொந்த செலவில் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், அவர்களை, உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
பல்லாவரத்தைச் சேர்ந்த டி.ராஜலட்சுமி: சென்னை லயோலா கல்லுாரியில் படித்து வருகிறேன். 'இன்டர்வியூ'க்கு கோல்கட்டா சென்று விட்டு, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு, 7:00 மணிக்கு விபத்து ஏற்பட்டது. நான், 'பி 8' பெட்டியில் பயணம் செய்தேன்.
![]()
|
எங்கள் பெட்டியில் பெரிய சேதம் இல்லை என்றாலும், பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். ரயில்கள் மோதிக் கொண்டதில் நெருப்பு கிளம்பியது. ரயில் நின்ற பின், கீழே இறங்கி பார்த்தோம்.
அப்போது தான், பெரிய விபத்து ஏற்பட்டது தெரிந்தது. 'பி 5' பெட்டி 'பல்டி' அடித்து கவிழ்ந்தது. ரயில் இன்ஜின் பக்கம் உள்ள முன்பதிவு இல்லாத பயணியர் பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள் அதிக சேதமடைந்தன. ஒவ்வொரு பெட்டியும், ஒவ்வொரு இடமாக விழுந்து கிடந்தது.
முன்பதிவு இல்லாத பயணியருக்கான பெட்டியில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மூன்று தண்டவாளங்களும் முழுதுமாக சேதமடைந்தன. இந்த விபத்திற்கு சிக்னல் கோளாறு காரணமா என்பது தெரியவில்லை. உயிரிழப்புகளை கண் முன்னாலேயே பார்த்தோம்.
விபத்து நடந்து, 15 நிமிடங்கள் கழித்து, 'ஆம்புலன்ஸ்' ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. விபத்தில் சிக்கியவர்கள், தங்கள் உறவினர்களுக்கு 'போன்' செய்யத் தொடங்கினர்.
எங்கள் பெட்டியில், ஐந்து, ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது. 'பி4, பி5' பெட்டிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. விபத்து நடந்து, ஒன்றரை மணி நேரம் அங்கேயே இருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்காசி, ஆலங்குளத்தைச் சேர்ந்த ஏ.ரமேஷ்: குடும்பத்தினருடன் ஜார்க்கண்டில் வசித்து வருகிறேன். குழந்தையை சொந்த ஊரில் உள்ள பள்ளியில் சேர்க்க திட்டமிட்டோம்.
ஒரு வாரத்திற்கு முன், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி விட்டேன். நான், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு கோல்கட்டாவில் இருந்து ரயிலில் புறப்பட்டேன்.
இரவு, 7:00 மணிக்கு இந்த கோர விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், ஆம்புலன்ஸ்கள் வந்தன. உள்ளூர் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடவுளின் அருளால், நான் பயணித்த 'ஏ2' பெட்டி விபத்திலிருந்து தப்பியது.
ரயிலில் இருந்து இறங்கி பார்த்தபோது, உடல்கள் சிதறிக் கிடந்தன. ஒருவருக்கு, அவருடைய இரண்டு கால்களும் முகத்தில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். உள்ளூர் மக்களோடு சேர்ந்து, நானும் முடிந்த அளவிற்கு மீட்புப் பணியில் ஈடுபட்டேன்.
அதன்பின், போலீசார் வந்து விட்டனர். பின், சம்பவ இடத்தில் இருந்து சிறிது துாரம் நடந்து, நெடுஞ்சாலைக்கு வந்தோம். அங்கிருந்து பஸ்சில், புவனேஸ்வர் வந்தோம். சிலருக்கு விமானத்தில் பயணிக்க வசதி இல்லாததால், விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து பேருந்துகளில் தமிழ்நாட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றனர்.
விபத்து நடந்த சிறிது நேரத்தில், எங்களுடைய மொபைல் போன்களுக்கு, தமிழக அரசு அதிகாரிகளும், ரயில்வே அதிகாரிகளும் தொடர்பு கொண்டு, நலன் விசாரித்து, 'ஏதாவது உதவி தேவையா?' என்று கேட்டனர்.
வாழ்நாளில் இதுபோன்ற ஒரு பயங்கர விபத்தை சந்தித்ததே இல்லை. எங்கள் கண்ணெதிரே, எங்களோடு பயணித்த, 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாங்கள் வணங்கும் தெய்வம் தான் எங்களை காப்பாற்றியது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த என்.நாகேந்திரன், 36, கூறியதாவது:கோல்கட்டாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு பயணித்தேன். இரவு 7:00 மணிக்கு, ஒடிசா, பாலசோர் இடத்திற்கு வந்தபோது, சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது.ரயில் போன வேகத்தில் மோதியதில், பொது பெட்டிகள் உருண்டன. இந்த பெட்டிகளில் தான் உயிரிழப்பு, காயம் அதிகமாக ஏற்பட்டது. நான் பயணித்த 'பி1' பெட்டி, தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. 'பி5' பெட்டி உருண்டு கவிழ்ந்தது. இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இந்த விபத்தில் நான் உயிர் பிழைத்தேன் என்பது பெரிய விஷயம்.இந்த விபத்து நடந்தபோது, உயிருடன் இருப்போமா, இருக்க மாட்டோமா என்பது, ஐந்து நிமிடத்திற்கு தெரியவில்லை. உள்ளூர் மக்கள் உடனடியாக விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக் கொண்ட கோர சம்பவம், நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொய்வின்றி நடக்கும் வேளையில், விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்து, அவர்கள் நல்ல நிலையில் தமிழகம் திரும்ப தேவையான உதவிகளை செய்ய கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவில், ரயில்வே பயணி வசதிகள் ஆலோசனைக் குழு தேசிய உறுப்பினர் ரவிச்சந்திரன் - 98409 45919; தமிழக பா.ஜ., பிற மொழி பிரிவு தலைவர் ஜெயக்குமார் - 94440 49949; மாநில ஊடக பிரிவு முன்னாள் தலைவர் பிரசாத் - 98401 70721 ஆகியோர் உள்ளனர். இக்குழு ஒடிசா விரைந்துள்ளது.விபத்தில் சிக்கிய அல்லது ரயிலில் பயணித்த தங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர் யாருக்காவது உதவி தேவைப்பட்டாலும், மேற்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.