வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பத்திரப் பதிவுகள் வாயிலாக, நடப்பு நிதி ஆண்டில், 25,567 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், கடந்த ஏப்ரலில் மட்டும் சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட, சார் - பதிவாளர் அலுவலகங்களில், 46 ஆயிரம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, 614 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக வீடு, மனை வாங்க, மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதற்கு ஈடு கொடுக்கும் வகையில், கட்டுமான நிறுவனங்கள் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதனால், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் அதிகரித்துஉள்ள நிலையில், பத்திரப் பதிவும் சூடுபிடித்துஉள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள, 575 சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு வாயிலாக, ஏப்., மாதத்தில், 1,301.11 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. இதில், 614.28 கோடி ரூபாய், சென்னை மண்டலத்தில் வசூலாகி உள்ளது.
இது குறித்து, பதிவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மண்டலத்தில், ஆறு பதிவு மாவட்டங்களின் கீழ், 63 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில், ஏப்., மாதத்தில், 46,410 பத்திரங்கள் பதிவாகின. இதன் வாயிலாக, 614 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
தென் சென்னை பதிவு மாவட்டத்தில் அதிகபட்சமாக, 15,564 பத்திரங்களை பதிவு செய்ததன் வாயிலாக, 266 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது.
சென்னை மண்டலத்தில் மிக அதிகபட்சமாக, திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், ஒரு மாதத்தில், 2,373 பத்திரங்கள் பதிவு செய்ததன் வாயிலாக, 44.45 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வருவாய் இலக்கு
பதிவுத் துறை பணிகள் குறித்த சீராய்வு கூட்டம், சென்னை நந்தனத்தில், நேற்று நடந்தது. வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
கடந்த, 2022 - 23 நிதி ஆண்டில், பதிவுத் துறை, 17,296 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில், 25,567 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சார் - பதிவாளர்கள் அலுவலகம் வாரியாக, இந்த இலக்கு பிரிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். வாரம், மாதம் அடிப்படையில் இலக்குகளை, மாவட்ட பதிவாளர்கள் ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -