வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: நகைக்கடன் தள்ளுபடி பஞ்சாயத்தால், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நுகர்வோர் வாங்கிய நகைக்கடன்களை மூன்றாண்டுகளாக திருப்பாத நிலையில் சங்கங்களின் வாராக்கடன் அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காதவர்கள் தங்களுக்கு அரசு தள்ளுபடி வழங்கும் என்ற நம்பிக்கையில் தற்போது வரை நகைக்கடனுக்கான வட்டி, அசலை செலுத்தாமல் உள்ளனர்.
கூட்டுறவு கடன் சங்கங்களில் பொதுமக்கள் டிபாசிட் செய்த தொகை மூலம் தான் நகைக்கடன்கள் வழங்கப்படுகின்றன. வாங்கிய கடன்களை நுகர்வோர் செலுத்தாதால், டிபாசிட் செய்தவர்களுக்கு முதிர்வு தொகையை திரும்ப செலுத்துவதில் சங்கங்கள் சுணக்கம் காட்டுகின்றன. ஒவ்வொரு கடன் சங்கத்திலும் தலா ரூ.50 லட்சம் முதல் ரூ. பல கோடி வரையிலான நகைக்கடன்கள் நிலுவையில் உள்ளன.
![]()
|
இரண்டாண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டு தொடங்கியும் தள்ளுபடி பெறாதவர்கள் கடனை திரும்பி செலுத்த தயாராக இல்லை.
நகைக்கடன் வாங்கிய ஒன்றரை ஆண்டுகளுக்குள் அசல், வட்டி திரும்ப செலுத்தாவிட்டால் ஏலம் விடுவதன் மூலம் சங்கங்களுக்கு நஷ்டமின்றி கடன் தொகையை பெறமுடியும். தற்போது இரண்டாண்டுகள் முடிந்தநிலையில் நகைகளை ஏலமும் விடமுடியவில்லை. அப்படியே விட்டாலும் வாங்கிய கடனுக்கு மேல் ஏலம் கிடைத்தால் தான் சங்கங்கள் தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் நஷ்டப்பட வேண்டியது தான்.
கடந்த ஒன்றே கால் ஆண்டுக்கு முன் சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் அனுப்பிய மேல் முறையீட்டு மனுக்களை கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அடுத்ததாக அயல்மாவட்ட அலுவலர்கள் வந்து ஆய்வு செய்ய வேண்டும். அரசு விதித்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பதை கூட்டுறவு தணிக்கை துறை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின் இந்த நகைக்கடன்களை தள்ளுபடிக்கு அறிவிக்கலாம் என உறுதி செய்யவேண்டும்.
பயனாளிகள் பட்டியலை அரசிடம் கொடுத்து நிதித்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வளவு நடைமுறைகளை பின்பற்றுவதற்குள் இன்னும் ஓராண்டை கடந்துவிடும். அதுவரை சங்கங்கள் கொடுத்த நகைக்கடனுக்கான வாராக்கடன் அதிகரித்து கொண்டே செல்கிறது.
நகைக்கடனுக்கு தள்ளுபடி இல்லை என்று தமிழக அரசு உறுதியாக அறிவித்தால் ஓரளவு நஷ்டத்தோடு தப்பிக்கலாம் என்பதால் சங்கங்கள் அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.