வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் நிர்வாக எல்லையை விரிவாக்கம் செய்வதால், நகர்ப்புற திட்டமிடலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதுடன், நெரிசல் வெகுவாக அதிகரிக்கும் என, நகரமைப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.

சென்னை பெருநகர் பகுதியின் தற்போதைய பரப்பளவு, 1,189 சதுர கி.மீ.,ராக உள்ளது. இந்த பரப்பளவை, 5,904 சதுர கி.மீ.,ராக விரிவாக்கம் செய்ய சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை மாவட்டங்களில் உள்ள, 1,225 கிராமங்களை சி.எம்.டி.ஏ.,வுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கத்துக்கு, 2018ல் அரசு, கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. இதன் பரப்பளவு மாற்றத்துக்கு, 2022ல் ஒப்புதல் வழங்கியது.
இதன் அடிப்படையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், அரக்கோணம் தாலுகா ஆகியவற்றின் திட்டமிடல், திட்ட அனுமதி வழங்கல் பொறுப்பை ஏற்க சி.எம்.டி.ஏ., தயாரானது. இதற்கு, அரசிடம் இருந்து இறுதி ஆணை பெற வேண்டும்.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ., எல்லையை, உள்ளது உள்ளபடி அப்படியே விரிவாக்கம் செய்வதால், இதில் சேரும் ஊரக பகுதிகள் கடுமையான பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்படும் என, புகார் எழுந்துள்ளது.
புரிதல் இல்லை
இது குறித்து தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சதானந்த் கூறியதாவது:
பெருநகர் வளர்ச்சி குழுமங்களை விரிவாக்கம் செய்வதை, அறிவியல் ரீதியாக அணுக வேண்டும். மாநகராட்சி, மாவட்ட எல்லைகளை விரிவாக்குவது போல், ஊரக பகுதிகளில் அதிகாரிகள் நடந்துக்கொள்ள கூடாது.
ஒரு குறிப்பிட்ட பெருநகர் பகுதியை விரிவாக்கம் செய்யும் போது, அதில் இணையும் பகுதிகளின் தற்போதைய நிலை, எதிர்கால வளர்ச்சி குறித்த தொழில்நுட்ப மதிப்பீடுகள் தேவை.

பெருநகர் வளர்ச்சி குழும விரிவாக்கம் தொடர்பாக, பல்வேறு மாநிலங்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிவிட்டன. இதன்படி, நகர்பாலிகா சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் உள்ளூர் மக்களின் தேவைகள் என்ன என்பதையும், அவர்களின் பங்களிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு பெருநகர் குழுமத்தை விரிவாக்குவதைவிட, அருகில் புதிய குழுமங்களை ஏற்படுத்தி, இவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தலாம்.
சென்னை பெருநகர் பகுதிக்கு மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கப்படும் நிலையில், இதில் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளுக்கு, இன்னும் முறையான முழுமை திட்டம் இல்லை என்பதை அதிகாரிகள் புரிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையை பசுமையாக்க ஒப்பந்தம்
சென்னை பெருநகரில், பசுமை பரப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, 'தி நேச்சர் கன்சர்வன்சி' என்ற, சர்வதேச தனியார் அமைப்புடன், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மூன்றாவது முழுமை திட்ட தயாரிப்பில், பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வழிமுறைகளை சேர்க்க, இந்த அமைப்பிடம் ஆலோசனை பெறப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம், சமீபத்தில் கையெழுத்தாகிஉள்ளது.தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் அடிப்படையில், சென்னைக்கான புதிய திட்டங்கள் உருவாக்க, இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சிக்கல்களை தவிர்க்க என்ன வழி?
எல்லை விரிவாக்க திட்டம் குறித்து, ஓய்வு பெற்ற அண்ணா பல்கலை நகர பொறியியல் பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் கூறியதாவது:சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கத்தை எதிர்த்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் சி.எம்.டி.ஏ., பதில் அளிக்காமல் உள்ளது. விரிவாக்கத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பல இடங்கள் இன்னும் ஊரக தன்மையுடன் இருக்கின்றன.
இவற்றை முறையாக மேம்படுத்தாமல், அதிக வளர்ச்சி அடைந்த சென்னையுடன் சேர்க்கும்போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.இதற்கு பதிலாக, புதிய குழுமங்களை ஏற்படுத்தி விரிவான நகர்ப்புற வளர்ச்சி மண்டலங்களை ஏற்படுத்தலாம். சென்னையில் தொழில், நகர்ப்புற வளர்ச்சி குவிவதை தடுத்து, பிற பகுதிகளுக்கு பரவலாக்க வேண்டும்.
முதற்கட்டமாக, சென்னையை ஒட்டிய மாவட்டங்களுக்காவது பரவலாக்க வேண்டும். இதில் அதிகாரிகள் தவறினால், நெரிசல் வெகுவாக அதிகரித்து மிக பெரிய சிக்கல்களை, சென்னை மக்கள் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இதற்கு ஏற்ற வகையில் மாற்றங்களை கருத்தில் கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -