காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவண்னாமலை மாவட்டம் செங்கம் தாலுகா செ.நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரத்னா மற்றும் அவரது குழந்தைகள் ராஜலட்சுமி, ஜெயகிருஷ்டி மற்றும் 2 மாத கைக் குழந்தை ஆகிய 4 பேரும் சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் இருந்துள்ளனர். சென்னைக்கு வந்து தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, ராமஜெயம் காரில் வீடு திரும்பி உள்ளார்.
இதையடுத்து சித்தேரி மேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், ராமஜெயம் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.