வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: ரயில் விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மின்னணு இன்டர்லாக் மாற்றத்தால் விபத்து நடந்துள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வுக்கு பின் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம் நடக்கிறது. தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்து நடந்த இடத்தில், 2வது நாளாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டி: கோரமண்டல் ரயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகள் முடிந்து, ரயில் சேவையை மீண்டும் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மின்னணு இன்டர்லாக் மாற்றத்தால் விபத்து நடந்துள்ளது. தற்போது மீட்பு பணிகளில் கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் ஆலோசனை
மீட்பு பணியை ஆய்வு செய்த அஸ்வினி வைஷ்ணவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது மீட்பு பணிகள், தண்டவாள சீரமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து மோடி கேட்டறிந்தார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளன. தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.