வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: ரயில் விபத்து பலி எண்ணிக்கை 288 அல்ல 275 பேர் என ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ஒடிசா அரசு தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ரயில் விபத்தில் பலியானவர்கள் 288 பேர் என வெளியாகிய தகவல் தவறு. மீட்கப்பட்ட ஒவ்வொரு உடலும் சரிபார்த்து, மருத்துவமனையில் வைத்து சோதனை செய்யப்பட்டது. அப்போது, சில உடல்கள் இருமுறை எண்ணப்பட்டது கண்டறியபட்டது.
இதனால் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் 275 பேர் என உறுதி செய்யப்பட்டது. இதுவரை 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது வரை 78 உடல்கள் அவர்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 10 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 1,175 பேரில் 793 பேர் குணம் வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 382 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அடையாளம் காணப்படாத உடல்கள் குறித்து, நாங்கள் புகைப்படங்களை மூன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இறந்தவர்களின் படங்கள் வெளியீடு
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின், உறவினர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இணையதளத்தில் இறந்தவர்களின் புகைப்படத்தில் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் கண்ட நபர்களின் எண்களைக் கொண்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அந்த உடல் உரியவர்களிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காண முடியவில்லை
இதனிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 முதல் 80 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளன. மற்றவர்களின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் ஒடிசா அரசு அறிவித்துள்ளது.