வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை:காவிரி ஆற்றில் புதைசாக்கடை கழிவுநீர் திறந்து விடப்படுவதை உடனடியாக சரிசெய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் தெரிவித்தார்.
மயிலாடுதுறை நகராட்சியில் 2007-ஆம் ஆண்டுமுதல் புதைசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் ஆள்நுழைவுத் தொட்டி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, காவிரி துலாக்கட்டம் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து அதிகளவில் பொங்கி வெளியேறும் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலந்துவருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் பகுதியில் புதைசாக்கடை கழிவுநீர் வெளியேறி காவிரி ஆற்றில் கலப்பதை இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நதியை புனிதமானதாக போற்றும் நம் நாட்டில்தான் அதனை அசுத்தப்படுத்துவதும் அதிகம் என்பதற்கு மயிலாடுதுறை காவிரி நதியே உதாரணம். மயிலாடுதுறையில் அரசே நதியை அசுத்தப்படுத்துகிறது. இதனால், தாங்களும் நதியை அசுத்தப்படுத்தவதில் தவறில்லை என்று பொதுமக்கள் நினைப்பார்கள்.
புனித நதி என பக்தர்கள் தேடிச்சென்று புனிதநீராடும் கங்கை நதியே காவிரி துலாக்கட்டத்தில் புனிதநீராடி தனது பாவங்களை போக்கிக்கொண்டதாக ஐதீகம். இதனால், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து புனித நீராடிச் செல்வர். மாற்றுத் திறனாளிகள் புனித நீராடுவதற்காக முடவன் முழுக்கு என கொண்டாடுவது மயிலாடுதுறையில்தான்.
இத்தனை புனிதம்வாய்ந்த காவிரி நதியில், நகராட்சியால் புதைசாக்கடை கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. புதைசாக்கடை கழிவுநீரை சுத்தகரிப்பதற்காக ஆறுபாதியில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், நகராட்சியின் பொறுப்பின்னை மற்றும் கவனக்குறைவு காரணமாக புனிதம் வாய்ந்த இந்த நதியை இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளனர். இந்து முன்னணி இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. தேவைப்பட்டால் இதனைக்; கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். உடனடியாக நகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு காவிரி நதியை மீண்டும் தூய்மைப்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.