பெங்களூரு: முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் ராஜினாமாவால், காலியான ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் பதவிக்கு, தகுதியானவர் கிடைக்காமல் கட்சி தலைமை திணறுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில், ம.ஜ.த., படுதோல்வி அடைந்தது. தோல்வியில் இருந்து மீண்டெழுந்த தலைவர்கள்,அடுத்து வரும் பெங்களூரு மாநகராட்சி தேர்தல், தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கு கட்சியை தயாராக்குகின்றனர்.
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பாக, வார்டு வாரியான முக்கிய தலைவர்களுடன், சில நாட்களுக்கு முன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
சட்டசபை தேர்தலில், ராம்நகர் தொகுதியில் போட்டியிட்ட நிகில் குமாரசாமி தோற்றதால், மாநில ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் பதவியை, ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு இன்னும் புதியவர் நியமிக்கப்படவில்லை.
தோல்விக்கு பொறுப்பேற்று, மாநில தலைவர் இப்ராஹிம், தன் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை அங்கீகரிக்காத ம.ஜ.த., மேலிடம், இவரையே பதவியில் நீட்டித்தது.
காலியான இளைஞர் அணி தலைவர் பதவிக்கு புதியவரை நியமிக்க ஆலோசிக்கிறது. இந்த பதவிக்கு எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா தகுதியானவர் என்ற கருத்து எழுந்துள்ளது. இவருக்கு தலைமை குணம், புத்திசாலித்தனம், அரசியல் திறன் உள்ளது. எனவே இவரை இளைஞர் அணி தலைவராக்கும்படி, தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், பிரஜ்வல் சம்மதிக்கவில்லை. ஹாசன் சட்டசபை தொகுதியில், தன் தாய் பவானிக்கு 'சீட்' மறுத்ததால், அவர் வருத்தத்தில் உள்ளார்.
அது மட்டுமின்றி லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. இந்த சூழ்நிலையில், இளைஞர் அணி தலைவரானால், மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். தொகுதியில் இருக்க முடியாது. எனவே அப்பதவியை ஏற்க, பிரஜ்வல் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், இளைஞர் அணி தலைமை பதவிக்கு யாரை நியமிப்பது என தெரியாமல், ம.ஜ.த., மேலிடம் திணறி வருகிறது.