வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், முந்தைய காலத்தில் நடந்த ரயில் விபத்துக்களை பா.ஜ., பட்டியலிட்டுள்ளது.
![]()
|
வலியுறுத்தல்
ஒடிசா ரயில் விபத்து நாடு முழுதும் அதிர்வலைகளை எழுப்பிய நிலையில், அதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.முன்னாள் ரயில்வே அமைச்சரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மற்றொரு முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய அரசு ரயில்வே துறையை அழித்துவிட்டதாக விமர்சித்தார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மம்தா பானர்ஜி, லாலு பிரசாத், நிதிஷ் குமார் ஆகியோர் ரயில்வே அமைச்சர்களாக இருந்த காலத்தில்
ஏற்பட்ட ரயில் விபத்துகளை பா.ஜ., பட்டியலிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள தாவது:ரயில்வே அமைச்சராக 2009ல் மம்தா பொறுப்பேற்றதை அடுத்து, அவரது பதவிக்காலத்தில், 54 ரயில் மோதல் விபத்துக்கள் நடந்தன. 839 முறை ரயில்கள் தடம் புரண்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் 1,451 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிதிஷ் குமார் காலத்தில் குறைந்தபட்சம் 79 ரயில் மோதல் விபத்துக்கள் நடந்துள்ளன. அப்போது, 1,000 முறை ரயில்கள் தடம்புரண்டுள்ளன. இவரது பதவி காலத்தில் ரயில் விபத்துகளில் 1,527 பேர் பலியாகியுள்ளனர். லாலு பிரசாத் காலத்தில் 51 முறை ரயில் மோதல் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. ரயில்கள் தடம்புரண்ட சம்பவங்கள் 550 முறை நிகழ்ந்துள்ளன. விபத்துக்களில் 1,159 பேர் உயிரிழந்துள்ளனர்.
![]()
|
புள்ளி விபரம்
ஒடிசா விபத்து மீட்புப் பணிகளில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 30 மணி நேரத்துக்கும் மேலாக ரயில்வே அமைச்சர் களத்தில் உள்ள நிலையில், பிற மத்திய அமைச்சர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த முழு விபரங்களை வெளிப்படையாக பகிர்ந்த மத்திய அரசு, உயிர்ப்பலி பற்றிய புள்ளி விபரங்களையும் மறைக்காமல் வெளியிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.